Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

Yemaali Movie Review

Yamalli Movie

அஜித் நடிப்பில் வெளிவந்த ‘முகவரி’ என்கிற பிராமதமான படத்தில் தொடங்கி, ‘6 மெழுகுவர்த்திகள்’ வரை உணர்வுப்பூர்வமான சில வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் துரையின் டைரக்சனில் வெளியாகியுள்ள படம் தான் ‘ஏமாலி’.

காதலர்களான சாம் ஜோன்ஸ், அதுல்யா இருவருக்கும் ஃபேஸ்புக்கில் போட்ட ஒரு செல்ஃபியால் தொடங்கும் சண்டை, அதுல்யா தனது காதலை பிரேக்-அப் செய்யும் அளவுக்கு கொண்டுவந்து விடுகிறது. ‘சரிதான் போடி’ என ஆரம்பத்தில் இதை விளையாட்டாக எடுத்துகொண்டு பிரேக் அப் பார்ட்டி எல்லாம் கொடுத்து கொண்டாடுகிறார் சாம் ஜோன்ஸ்.

ஆனால், போகப்போக காதல் பிரிவின் வலியை தாங்க முடியாத சாம் ஜோன்ஸ், அதுல்யா மட்டும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ஒருகட்டத்தில் அவரை கொல்ல முடிவெடுக்கிறார். அவருடன் கூடவே அண்ணன் ஸ்தானத்தில் இருக்கும் சமுத்திரக்கனி அவரது கோபத்தை தணித்து அவரை சாந்தப்படுத்த முயல்கிறார்.

ஆனாலும் சாம் ஜோன்ஸ் தீவிரமாக இருக்கவே, அவரது போக்கிலேயே விட்டுப்பிடித்து அவரது கொலை செய்யும் எண்ணத்தை மாற்ற நினைக்கிறார் சமுத்திரக்கனி. இதற்காக மாட்டிக்கொள்ளாமல் கொலைசெய்வது எப்படி என்பதையும் கொலைசெய்துவிட்டால் அதன்பின் போலீஸ் விசாரணை எப்படி இருக்கும் என்பதையும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் முன்கூட்டியே கற்பனையாக திட்டமிடுகிறார்கள்..

தனது இந்த திட்டத்தால் கொலை செய்யும் எண்ணத்தை சாம் ஜோன்ஸ் மனதில் இருந்து சமுத்திரக்கனி அகற்றினாரா..? இல்லை இது வேறுமாதிரி விளைவை உண்டாக்கியதா என்பதே மீதிகதை.

காதலர்கள் காதலிக்க மெனக்கெடுவது போல, கிடைத்த காதலை தக்கவைத்து கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை.. இதை சாம் ஜோன்ஸ் கேரக்டர் மூலம் அழகாக உணர்த்தியுள்ளார் இயக்குனர் துரை. மூன்றுவித கெட்டப்புகளில் வரும் சாம் ஜோன்ஸ் காதல் இளைஞனாக அவர் மீது அதிகப்படியான கோபம் வருமாறு நடித்துள்ளார். மற்ற இரண்டு கேரக்டர்களில் முற்றிலும் மாறுபட்ட முகம் காட்டி ஆச்சர்யப்படுத்துகிறார்.

இன்னொரு கதாநாயகனாக வரும் சமுத்திரக்கனிக்கும் மூன்று வேடங்கள் தான். இதில் பக்குவப்பட்ட மனிதராக நாயகனை திருத்த முயல்வதும் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றிய பெண் தன்னுடன் லிவிங் டுகெதர் முறையில் இணைந்து வாழ முயற்சிக்கும்போது நாகரிக எல்லையை கடைபிடிப்புதும் என காதலை, பெண்களின் மனதை அணுக வேண்டிய முறையை அழகாக பாடம் எடுத்துள்ளார். போலீஸ் அதிகாரியாக, சிபிஐ அதிகாரியாக அவரது இரண்டு கேரக்டர்களும் எதற்கு என்பதற்கு படத்தை பார்த்தால் மட்டுமே சரியான விடை கிடைக்கும்.

நாயகி அதுல்யாவுக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு.. பயன்படுத்தியுள்ளார். அதிரடியாக கவர்ச்சிக்கு தாவியிருந்தாலும், எல்லை மீறாமல் நடித்திருக்கிறார். தற்கொலைக்கு முயற்சித்து காப்பற்றப்பட்ட பெண்ணான ரோஷினியும் சமுத்திரகனியுடனான நட்பில் கவனம் ஈர்க்கிறார்.

சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸின் நண்பர்கள் கூட்டணியில் பாலசரவணன் கலகலப்பூட்ட முயற்சிக்கிறார்.. ஏன் நீங்க மட்டும் தான் அட்வைஸ் பண்ணனுமா என சமுத்திரக்கனியையே வாருவது செம லந்து. கற்பனை காட்சிகளில் கான்ஸ்டபிளாக வரும் சிங்கம் புலியின் காட்சிகள் கலாட்டா தான்.

சாம்.டி.ராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை வலுசேர்த்திருக்கிறது. ஐ.ஜே.பிரகாஷ், எம். ரதீஷ் கண்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. கொலை செய்தால் விசாரணை எப்படி இருக்கும் என்கிற முன்கூட்டிய திட்டமிடலுக்கான காட்சிகள் புதுமுயற்சி தான்..

ஹாலிவுட் ஸ்டைலில் இருக்கும் அந்த எபிசோட் ஆரம்பித்தில் ரசிகர்களுக்கு சற்று ஆர்வத்தைக் கொடுத்தாலும் அவற்றிலும் சமுத்திரக்கனியையும் சாம் ஜோன்சையுமே பயன்படுத்தி இருப்பது சாதாரண ரசிகனை நன்றாக குழப்பவே செய்யும். அந்தவகையில் இவர்களது கற்பனை திட்டத்தில் பாலசரவணன் இடம்பெறாமல் சிங்கம் புலி இடம் பெறுவதும் லாஜிக்காக இடிக்கிறது. க்ளைமாக்ஸ் நாம் முற்றிலும் எதிர்பாராதது.

ஒரு இக்கட்டான சூழலில் காதலில் பிரேக் அப் ஏற்பட்டாலும் அதை அமைதியாக அணுகுவது தான் நல்லவிதமான தீர்வை அளிக்கும்.. காதலுக்காக இனி கொலையும் நடக்க கூடாது, தற்கொலையும் நடக்க கூடாது”, என்ற கார்டு போடப்படுகிறது. நல்ல விஷயத்தை இயக்குநர் சொல்ல முயற்சித்திருக்கிறார் என்பதை சொல்ல முயன்றுள்ளார். என்ன ஒன்று அதை அதை சுற்றி வளைத்து கூறியுள்ளார் அவ்வளவுதான்..
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *