Search

Viswasam Movie Review

viswasam-review

அஜித்-சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’.. அண்ணன் தம்பி பாசம், அண்ணன் தங்கை பாசம், கணவன் மனைவி பாசம் என மூன்று படங்களிலும் குடும்ப உறவுகளின் மேன்மையை சொன்ன இயக்குனர் சிவா, இதில் மகளின் கனவை நிறைவேற்ற, அவரின் உயிரைக் காக்க, உறுதுணையாக இருந்து, வெற்றி பெறச் செய்யும் தந்தையின் கதையை சொல்லியிருக்கிறார்.

இந்தக் கதைக்குள் காமெடி, அடிதடி, காதல், குடும்பம், பாசம், நேசம் என அனைத்தையும் சேர்த்து, ஒரு பக்கா பொழுதுபோக்கு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள் அஜித் மற்றும் சிவா குழுவினர்.. அடிதடி, ஜாலி, கேலி என்று கிராமத்தில் தூக்குதுரை அலப்பறையைக் கொடுத்துக் கொண்டிருக்க, அங்கே டாக்டர் நிரஞ்சனா மருத்துவ முகாமிற்காக வருகிறார்.

முதல் சந்திப்பில் மோதல், பிறகு அதுவே காதலாகிறது. அது திருமணமாகவும் மலர, பெண் குழந்தையும் பிறக்கிறது. ஆனால், ஒருகட்டத்தில், மகளை அழைத்துக் கொண்டு கணவரிடம் இருந்து தன் சொந்த ஊரான மும்பைக்குச் சென்றுவிடுகிறார். திருவிழாவுக்காக, மனைவியையும் குழந்தையையும் அழைப்பதற்காக, தன் சகாக்களுடன் பத்துவருடங்கள் கழித்து மனைவியைப் பார்க்க மும்பை செல்கிறார். அங்கே மகளுக்கு பெரிய பிரச்சனை ஒன்று காத்திருப்பது தெரிகிறது.

அந்தப் பிரச்சினைகளில் இருந்தும் ஆபத்துகளில் இருந்தும் எப்படி அஜித் தனது மகளை காக்கிறார், மகளுக்கு ஏற்படுகிற ஆபத்து எதனால், மகளுக்கு அப்பாவைத் தெரிந்ததா, மனைவி மனம் மாறினாரா, எல்லோரும் ஒன்று சேர்ந்தார்களா, திருவிழாவில் கலந்துகொண்டார்களா என்பதை, கலகல கமர்ஷியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லியிருகிறார்கள்.

படம் முழுக்க வேஷ்டி, முறுக்கு மீசை, மதுரை ஸ்லாங் என புது மாடுலேஷனும் பாடி லாங்வேஜுமாக வெளுத்து வாங்கும் தூக்குதுரை அஜித், ரசிகர்களுக்கு நிச்சயம் புதுசு.. ரோபோ சங்கருடனும் தம்பி ராமையாவுடன் நடுவே யோகிபாபுவுடனும் சேர்ந்து செய்யும் அலப்பறைகளுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. அஜித் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் படம் பார்க்கிறவர்களுக்கும் தூக்குதுரையை பிடித்துப் போய்விடும். முக்கியமாக, பிற்பாதியில் மகளுடனே இருந்துகொண்டு பாசத்துக்கு ஏங்கி மருகுகிற அன்பான அப்பாவாகவும் நடிப்பிலும் புதியதொரு பாய்ச்சலைக் காட்டியிருக்கிறார் அஜித்.

கனமான நாயகி வேடம் தனக்கு. கிடைக்கும் தருணங்களிலெல்லாம் நடிப்பில் ஸ்கோர் செய்யும் நயன்தாரா இந்தப்படத்திலும் அதை செவ்வனே செய்திருக்கிறார்.’என்னை அறிந்தால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒளிர்ந்த அனிகா, அஜித் நயன்தாராவின் மகளாக, நடித்திருக்கிறார். பயம், ஆர்வம், கலவரம், கவலை, கோபம், மரண பீதி என மொத்தத்தையும் எங்கெங்கு எவ்வளவு எக்ஸ்பிரஷன்கள் கொடுக்கமுடியுமோ அதை சரியே செய்து அசத்திவிடுகிறார். குறிப்பாக அஜித் – அனிகா வரும் காட்சிகளிலெல்லாம், படம் பார்க்கும் அப்பாக்களும் மகள்களும் சட்டென்று கண்ணீர் கசிந்துவிடுவார்கள். வில்லன் ஜெகபதி பாபு வழக்கம்போல மிரட்டல் ரகம்.

இமானின் இசை படத்தின் பலத்தை இன்னும் கூட்டுகிறது. பாடல்களில் பட்டையைக் கிளப்பிய இமான், பின்னணி இசையில், கவனம் ஈர்க்கிறார். முதல் பாதி முழுக்க. கிராமத்து வயல்களையும் வாய்க்கால்களையும் பிற்பாதியில் மும்பையின் பிரமாண்டத்தையும் வெகு அழகாக படமாக்கியிருக்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி.. அதேபோல் ரூபனின் எடிட்டிங்கும் கச்சிதம். பாடல்களிலும் சண்டைக்காட்சிகளிலும் இவரின் பங்கு பிரமிக்க வைக்கிறது.

முதல்பாதியில் ரோபோசங்கர், தம்பி ராமையா, யோகிபாபு ஆகியோர் சேர்ந்து காமெடி சரவெடிகளைக் கொளுத்திப் போடுகின்றனர். ஆனால் பிற்பாதியில் விவேக் போர்ஷனில் காமெடி சொதப்பல்.. டீசன்ட் வில்லனாக ஜெகபதிபாபுவின் கோபமும் மிரட்டலும் நச்சென்று இருக்கிறது.. மொத்தத்தில் வீரம் என்கிற ஹோண்டா காருக்கு கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து அழகான கலர் கோட்டிங் அடித்து, சில எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளை மாட்டி, விஸ்வாசம் என்கிற பி எம் டபிள்யூ காராக மாற்றி இருக்கிறார் சிவா. அஜித் ரசிகர்களுக்கு இந்த கார் சவாரி ரொம்பவே பிடிக்கும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *