Search

Sangu Chakkaram Movie Review

Sangu Chakkaram Movie

குழந்தைகளை மையப்படுத்தி படங்கள் வெளியாவது குறைந்துவிட்ட நிலையில், குழந்தைகளை குதூகலப்படுத்துவதற்காகவே எடுக்கப்பட்டுள்ள ஹாரர் த்ரில்லர் படம் தான் இந்த ‘சங்கு சக்கரம்’.

வசதியான வீட்டு குழந்தைகள் சிலர் விளையாடுவதற்கு இடம் இன்றி தெருவில் விளையாடுகின்றனர். குழந்தை கடத்தல் மன்னன் திலீப் சுப்பராயனின் ஏற்பாட்டின்படி அவர்களை பக்கத்தில் உள்ள பங்களா ஒன்றில் விளையாட இடம் இருப்பதாக சொல்லி அனுப்புகிறார் பெரியவர் ஒருவர்.

அதேபோல பெற்றோர் இல்லாத சிறுவன் நிசேஷின் (தமிழ்) கார்டியன்களாக இருக்கும் டார்வினும் டிசௌஷாவும் நிசேஷை தந்திரமாக கொன்றுவிட்டு அவரது சொத்தை அபகரிக்க நினைக்கின்றனர். அதனால் அவரை பக்கத்தில் உள்ள அதே பங்களாவிற்கு ஏமாற்றி அனுப்பி வைத்து, அவனே வைத்து கதையை முடிக்க திட்டமிடுகின்றனர்.

இன்னொரு பக்கம் பேய் இருப்பதாக சொல்லப்படும் அந்த பங்களாவில் இருந்து பேயை துரத்திவிட்டு, அதை விலைக்கு விற்க நினைக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் பேயை விரட்ட சாமியார் ஒருவரை அனுப்புகிறார். இது தவிர இளைஞன் ஒருவன் தனது காதலியை அங்கு அழைத்துவந்து அவளது விருப்பத்திற்கு மாறாக தவறாக நடக்க முயல்கிறான்.

ஆனால் இவர்கள் நினைப்புக்கு மாறாக அந்த பங்களாவில் குடியிருக்கும் அம்மா-மகள் பேய்களான அங்கயற்கண்ணி – சிறுமி மலர் (எம்.எஸ்.கீதா-பேபி மோனிகா) இருவரும் உக்கிரம் காட்டுகின்றனர். இதில் குட்டிப்பேய் பேபி மோனிகா மட்டும், உள்ளே வந்து மாட்டிக்கொண்ட சிறுவர்களிடம் நட்பாகி, இவர்களுக்கு தீங்கு செய்ய நினைக்கும் திலீப் சுப்பராயன், டார்வின், டிசௌஷா மூவரையும் கதிகலங்க வைக்கிறது.

இந்தநிலையில் வெளிநாட்டு மந்திரவாதிகளை பங்களாவுக்குள் அனுப்புகிறார் ரியல் எஸ்டேட் அதிபர். அவர்களும் இந்த அம்மா-மகள் பேய்களை குடுவைக்குள் அடைக்கின்றனர். இந்த இக்கட்டான சூழலில் இருந்து சிறுவர்களால் தப்பிக்க முடிந்ததா, குடுவையில் அடைபட்ட பேய்களின் நிலை என்ன ஆனது என்பதற்கு க்ளைமாக்ஸ் விடை சொல்கிறது.

படம் முழுக்க பேய்களின் ராஜ்யத்தை விட சிறுவர்களின் ராஜ்யம் தான் மேலோங்கி நிற்கிறது. அறிவுப்பூர்வமாக கேள்விகளை கேட்டு பேயை மட்டுமல்ல நம்மையும் அயர வைக்கிறான் சிறுவன் நிசேஷ்.. குறிப்பாக தன்னை தாக்க வரும் அம்மா பேய் கீதாவிடம், கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டு அதிரவைப்பதும், அதன்பின் அவனை பார்க்கும்போதெல்லாம் அவர் தெறித்து ஓடுவதும் வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் காட்சி. அதேசமயம் அந்த கேள்வி நம் எல்லோர் மனதிலும் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டு இருக்கும் கேள்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேயாக நடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை படம் முழுக்க தனது அபாரமான நடிப்பால் உணர்த்தியுள்ளார் நடிகை எம்.எஸ்.கீதா. அவர் மட்டுமா, குட்டிப்பேயாக வரும் மோனிகாவும் தனது க்யூட் பார்வையால் நம் மனதை கொள்ளை கொள்கிறார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா கெட்டப்பில் ‘டாரு டமாரு’ என அடிக்கடி கெத்து காட்டும் திலீப் சுப்புராயன் காமெடி வில்லனாக கலக்கியுள்ளார். குழந்தைகளை கடத்த திட்டம் போட்டு பேயிடம் மாட்டிக்கொண்டு நன்றாக வாங்கிக்கட்டும் காட்சிகள் செம கலாட்டா. இவர் தவிர சீரியஸ் வில்லனாக நடித்துள்ள ராஜாவும் (டிசௌஷா) காமெடி வில்லனாக நடித்துள்ள ஆதர்ஷும் (டார்வின்) கலகலப்பூட்ட தவறவில்லை.

படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற குட்டீஸ்கள் அனைவருமே இது படம் என்கிற உணர்வே இல்லாமல், ஒரு பங்களாவுக்குள் மாட்டிக்கொண்டால் எப்படி உணர்வார்களோ அதை இயல்பாக தங்களது நடிப்பில் கொண்டு வந்துள்ளனர். அந்த அளவுக்கு இயக்குனர் மாரிசன் அவர்களை பக்குவமாக வேலை வாங்கியுள்ளார் என்பது புரிகிறது. அதேசமயம் மேல் தட்டு குழந்தைகள், அடித்தட்டு குழந்தைகளிடம் பழக இந்த சமூகம் எப்படி தடை போடுகிறது என்பதையும் பொட்டில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறார்.

க்ளைமாக்ஸில் பேய்களை ஓட்டுவதற்காக என்ட்ரி கொடுக்கும் அமெரிக்க, சீன மந்திரவாதிகளும் அவர்களின் பேய் ஓட்டும் முறைகளும், இதுவரை பூஜை, சக்கரம், என பார்த்து பழகிய நம்மை நிஜமாகவே வியப்பில் ஆழ்த்துகின்றன. அதேசமயம் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் நம்ம ஊர் சாமியாரின் வித்தையும் ‘அட நம்ம ஊர்னா நம்ம ஊர் தாண்டா’ என சபாஷ் போட வைக்கிறது.

படம் முழுக்க ஒரே பங்களாவிலேயே எடுக்கப்பட்டிருந்தாலும், அதை அலுப்பு தட்டாமல் கொண்டு சென்றிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் ரவி கண்ணனும், இசையமைப்பாளர் ஷபீரும். பேய் படங்களிலேயே லாஜிக்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் வசனங்கள் பக்கபலமாக அமைந்துள்ளதை மறுக்க முடியாது.

குழந்தைகளை வைத்து அறிவுப்பூர்வமாக ஒரு ஹாரர் படம் எடுக்க முடியும் என நிரூபித்துள்ளார் இயக்குனர் மாரிசன். வருட இறுதியில் ஒரு கலகலப்பான படமாக வந்துள்ள இந்த ‘சங்கு சக்கரம்’ அரையாண்டு தேர்வு விடுமுறையில் இருக்கும் குட்டீஸ்கள் ஜாலியாய் ரசித்து என்ஜாய் பண்ணுவதற்கேற்ற படம் என்பதில் சந்தேகமே இல்லை. தாராளமாக உடனே டிக்கெட் போடலாம்..
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *