Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

Sandakozhi 2 Movie Review

san

இந்தவருடம் இரண்டாம் பாகங்களின் வருடம் என சொல்லும் விதமாக ஏற்கனவே ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. இந்த சூழலில், பனிரெண்டு வருடங்களுக்கு முன் சூப்பர்ஹிட்டான விஷாலின் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகமும் இன்று வெளியாகி உள்ளது. இதில் ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் என்ன மாற்றங்களை செய்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி..? பார்க்கலாம்.

ஏழு வருடங்களுக்கு முன் நடத்த கோவில் திருவிழாவில் சாப்பாட்டு பிரச்சனையில் சாதாரணமாக வெடித்த தகராறு, ஏழு கிராமங்களில் ஒன்றை சேர்ந்த வரலட்சுமியின் கணவரின் உயிரை பறிக்கிறது. பதிலுக்கு பறித்தவனின் குடும்பத்தை வரலட்சுமியின் விசுவாசிகள் திருவிழாவன்றே கொன்று குவிக்க, அந்த குடும்பத்தில் அன்பு (மெட்ராஸ் ஜானி) மட்டுமே மிஞ்சுகிறார்.

ஏழு வருடம் கழிந்த நிலையில் சட்ட சிக்கல்களை முடித்து, நின்றுபோன திருவிழாவை பெரியவர் ராஜ்கிரண் சிறப்பாக நடத்த முடிவுசெய்கிறார். வரலட்சுமி தரப்பு திருவிழாவில் வைத்து அன்புவை போட்டுத்தள்ள நினைத்தாலும், அந்த நேரத்தில் ஊருக்கு கட்டுப்பட்டு திருவிழாவில் பிரச்சனை செய்வதில்லை என வாக்கு கொடுக்கின்றனர்.

அன்புவை பாதுகாக்கும் பொறுப்பை ராஜ்கிரண் ஏற்றுக்கொள்ள, இந்தசமயத்தில் சரியாக ஏழு வருடத்திற்கு முன் வெளிநாடு கிளம்பிப்போன விஷால் திருவிழாவுக்காக ஊர் திரும்புகிறார். தாங்கள் செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறி வரலட்சுமி தரப்பு அன்புவை போட்டுத்தள்ள அலைவது தெரியவர அன்புவின் பாதுகாவலனாக மாறுகிறார் விஷால்.

வரலட்சுமியின் உக்கிரம் காரணமாக திருவிழா முடிவதற்குள்ளாகவே அன்புவை காலிபண்ண கருவிக்கொண்டு அலையும் கும்பலிடமிருந்து அன்புவை விஷால் காப்பாற்றினாரா என்பதுதான் மீதிப்படம்.

இரண்டாம் பாகம் எடுப்போம் என எந்த திட்டமிடலும் இல்லாமல் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர்களுக்கு, இரண்டாம் பாகத்தில் நிறைய சவால்கள் இருக்கும். இதிலும் அதேபோல இருந்தாலும் வெகு சாமர்த்தியமாக அதை சமாளித்திருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

நடிப்பிலும் தோற்றத்திலும் இத்தனை வருடங்களில் எந்த மாறுபாடும் இல்லாமல் விஷாலும் ராஜ்கிரணும் காட்சியளிப்பது மிகப்பெரிய ஆச்சர்யம். டைட்டிலுக்கேற்ப படம் முழுதும் சண்டக்கோழியாய் சிலும்புகிறார் விஷால். எதிரிகளை அடிக்கும் அடி ஒவ்வொன்றும் அவ்வளவு உக்கிரம். மற்றபடி தந்தைக்கு கட்டுப்பட்ட மகன் என்கிற எல்லைக்கோட்டை மீறாமல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் விஷால். சண்டக்கோழி படத்தில் பார்த்த அதே ராஜ்கிரண் தான் என்று சொல்வதுவே ராஜ்கிரணுக்கு நாம் சூட்டும் புகழாரம் தான்.

முதல் பாகத்தில் மீரா ஜாஸ்மினின் அட்ராசிடிகளை கண்டு ரசித்தவர்களுக்கு இதில் கீர்த்தி சுரேஷ் எந்தவிதத்தில் மாற்று மருந்தாக இருக்கப்போகிறார் என நினைத்தால், சாமர்த்தியமான திரைக்கதையால் அவரை அழகாக கதைக்குள் கோர்த்து விட்டிருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. தெக்கத்திப்பெண்ணாக துறுதுறு நடிப்பை வழங்கியுள்ளார் கீர்த்தி. குறிப்பாக விஷால்-கீர்த்தி காதல் காட்சிகள் ‘கண்ணுப்பட போகுதய்யா’ ரகம்.

இந்தப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் வரலட்சுமி.. வில்லி என சொல்லமுடியாத ஆனால் ஆத்திரக்காரிக்கு புத்தி மட்டு என்கிற கேரக்டரில் அழகாக பொருந்தியிருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் செம பெர்பாமன்ஸ் பண்ணியிருக்கிறார்.

மெட்ராஸ் ஜானிக்கு படம் முழுதும் விஷாலுடனேயே பயணிக்கும் கேரக்டர். இந்தப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமாகும் வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார். முதல் பாகத்தில் இடம்பெற்ற கஞ்சா கருப்பு, சண்முகராஜன், தென்னவன் உள்ளிட்ட ஆட்கள் அதே பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கூடுதலாக உள்ளே நுழைந்துள்ள முனீஸ்காந்த் காமெடி ப்ளஸ் குணசித்திர முகம் காட்டுகிறார். வரலட்சுமியின் தம்பியாக மலையாள நடிகர் அப்பாணி சரத்குமாரும் கவனிக்க வைக்கிறார்.

யுவன்சங்கர் ராஜா படம் முழுதும் திருவிழா கொண்டாட்ட மனநிலையிலே நம்மை உட்கார வைக்கிறார். அதேபோல பிரமாண்ட துணை நடிகர் கூட்டம், கோவில் திருவிழா காட்சிகளை பிரமிப்பாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷக்தி.

வழக்கம்போல ஒருசில கேள்விகள் லாஜிக்காக எழுந்தாலும் அவையெல்லாம் கதையோட்டத்தை எந்த விதத்திலும் பாதித்ததாக தெரியவில்லை. சண்டக்கோழி பார்த்த ரசிகர்களை இதில் துளியும் ஏமாற்றிவிட கூடாது என பார்த்து பார்த்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் லிங்குசாமி. படம் முழுதுமே திருவிழா கூட்டமா என்கிற அயர்ச்சி ஏற்படாமல் திருவிழாவை மையப்படுத்தியே திரைக்கதையை அமைத்துள்ளார் லிங்குசாமி. க்ளைமாக்ஸை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு நேர்த்தியாக முடித்ததற்காக லிங்குசாமியை பாராட்டலாம்.

சண்டக்கோழி-2 ; வீரியம் குறையாத கோழி தான்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *