Search

Petta Movie Review

petta-review

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பேட்ட படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படம் ரசிகர்களின் அகோரப்பசிக்கு ஏற்ற தீனி போட்டு உள்ளதா..? பார்க்கலாம்.

பாபிசிம்ஹா அண்ட் கோ கண்ட்ரோலில் உள்ள கல்லூரி ஹாஸ்டலுக்கு வார்டனாக வந்து சேர்கிறார் ரஜினி. அங்கே பாபி சிம்ஹாவின் அடாவடிகளை கட்டுப்படுத்தி அனைத்தையும் ஒழுங்குக்குக் கொண்டு வருகிறார் ரஜினி. இன்னொரு பக்கம் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவன் அன்வரின் காதலுக்காக அவரது காதலி மேகா ஆகாஷின் அம்மா சிம்ரனிடம் தூது போகிறார்.

இந்த நிலையில் அவமானப்பட்ட பாபி சிம்ஹா ரஜினியையும் அனைவரையும் தாக்குவதற்காக ஆட்களுடன் ஹாஸ்டலுக்குள் நுழைகிறார். ஆனால் நடக்கும் சண்டையில் எதிர்பாராத விதமாக பாபி சிம்ஹாவும் சேர்த்து தாக்கப்படுகிறார்.. பின்னர் தான் தெரிகிறது வந்தவர்கள் வெளியாட்கள் என்பதும் வந்தவர்கள் அன்வரை கொள்ள குறிவைத்து வந்தவர்கள் என்பதும்.. யார் அவர்கள்..? எதற்காக அன்வரை கொல்ல அனுப்பப்பட்டார்கள்.. ரஜினி எதற்காக இந்த ஹாஸ்டலுக்கு வார்டனாக வந்தார்.. அதன் பின்னணி என என்பதற்கு மதுரை பிளாஷ்பேக்கும் உத்தர பிரதேச கிளைமாக்ஸும் பல ஆச்சரியங்களுடன் விடை சொல்கின்றன

அக்மார்க் ரஜினி ஃபார்முலாவில் உருவாக்கப்பட்ட படம் என்பதை காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கிறார்கள் கார்த்திக் சுப்புராஜும் ரஜினியும். அதேசமயம் ரஜினி வயதுக்கேற்ற கதாபாத்திரத்தையும் உருவாக்கி, அதில் ரஜினியின் மாஸை காட்டியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். சூப்பர் ஸ்டார் ரஜினி வழக்கம்போல மிடுக்கும் துடிப்பும் கலந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் பஞ்ச் வசனங்கள் ஒவ்வொன்றும் கைதட்டலை அள்ளுகின்றன ஹாஸ்டலில் ஒற்றை ஆளாக எதிரிகளை துவம்சம் செய்வது இன்னொரு பாட்ஷா மொமென்ட்.

அதுமட்டுமல்ல நடிகர் சசிகுமாரின் நட்பு காம்பினேஷன் அதுவும் மதுரை பின்னணியில் ரொம்பவே ஜாலியான எபிசோடாக அமைந்திருக்கிறது இடைவேளைக்கு பின்பு வந்தாலும், வரும் கொஞ்ச நேரத்திலும் ரசிகர்களின கவனத்தை தன் பக்கம் திருப்பும் விதமாக வழக்கம்போல தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி..

பாபி சிம்ஹாவிற்கு நீட் அன்ட் க்யூட் கேரக்டர் அதில் செமையாக செட் ஆகியிருக்கிறார் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன் இருவருக்குமே இந்தப்படத்தின் மூலம் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் தங்கள் கனவு பல வருடங்கள் கழித்து நனவாகி இருக்கும் சந்தோசம் அவர்கள் வரும் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது நவாசுதீன் சித்திக் அவரது வில்லத்தனமும் அந்த தோற்ற மாறுபாடும் அவர் எவ்வளவு பக்குவமான நடிகர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது

மற்ற துணை கதாபாத்திரங்களில் இயக்குனர் மகேந்திரன் ஹாஸ்டல் வார்டனாக முனீஸ்காந்த், கலெக்டராக வரும் குரு சோமசுந்தரம், அறம் ராமச்சந்திரன் இன்னும் இரண்டு முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன், மேகா ஆகாஷ் மற்றும் அவரது காதலன் என பலரும் தங்களது பங்களிப்பை அழகாக கொடுத்திருக்கின்றனர்

அனிருத்தின் இசையில் பாடல்கள் இரண்டு மூன்று முறை எழுந்து ஆட்டம் போட வைக்கின்றன குறிப்பாக உல்லாலா பாடலும் மரணமாஸ் பாடலும். அதேபோல ஒளிப்பதிவாளர் திரு, காதல் காட்சிகள் ஆகட்டும் அல்லது ஆக்சன் காட்சிகள் ஆகட்டும் மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார். குறிப்பாக ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அழகோ அழகு.. ஆக்சன் காட்சிகளில் பீட்டர் ஹெயின் மாஸ்டர் தெறிக்க விட்டிருக்கிறார்

முழுக்க முழுக்க ரஜினி படம் என்பதாகவே இந்த படம் உருவாகி இருக்கிறது அதே சமயம் படத்தில் முதல் பாதி வேகமாகவும் கலகலப்பாகவும் நகர்வது போல அல்லாமல் இடைவேளைக்கு பின்னர் கொஞ்சம் வேகம் குறைவதும் உண்மை. ஆனால் ரசிகர்களின் உற்சாகத்திற்கு அது எந்தவிதத்திலும் தடைபோடாது என்பதும் உண்மை.. மொத்தத்தில் பேட்டயில் தனது கொடியை மீண்டும் ஒருமுறை ஏற்றியுள்ளார் ரஜினி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *