Search

Mupparimaanam Movie Review

mupparimanam-review

ஒரே ஊரை சேர்ந்த ஷாந்தனுவும் சிருஷ்டியும் சிறுவயது தோழர்கள்.. சூழ்நிலையால் ஷாந்தனு வேறு இடம் மாறி, மீண்டும் இளைஞனாக அதே ஊருக்கு திரும்பும்போது ஷாந்தனுவின் மீதான சிருஷ்டியின் அன்பு காதலாக மாறி இருக்கிறது. ஆனால் ஏற்கனவே ஷாந்தனுவின் போலீஸ்கார அப்பாவால் சிருஷ்டியின் அண்ணன் திருமணம் நின்று போனதுடன், அவர் பத்து வருடம் சிறைத்தண்டனையும் அனுபவிக்கிறார்.

அந்த ஆத்திரமும் வன்மமும் சேர்ந்துகொள்ள, வழக்கம்போல சிருஷ்டியின் வீட்டிலிருந்து காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது.. காதலியின் வீட்டை எதிர்த்து அவளை திருமணம் செய்தால் சிருஷ்டியை கௌரவ கொலை செய்யக்கூட தயங்கமாட்டார்கள் என்பது தெரியவர, காதலை தியாகம் செய்கிறார் ஷாந்தனு,

ஆனால் அதேசமயம் காதலியை மறக்க குடி, போதை என பாதை மாறுகிறார்., இதனால் மனம் நொந்த ஷாந்தனுவின் அம்மா ஹார்ட் அட்டாக்கில் இறக்கிறார். இந்தநிலையில் கொஞ்சம் தெளிவடைந்த ஷாந்தனுவுக்கு சிருஷ்டியின் திருமணம் நடக்க இருப்பது தெரியவருகிறது.

நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி மணமேடையில் இருந்து அவரை கடத்துகிறார் ஷாந்தனு.. இனி காதலர்கள் ஒன்று சேர போராட்டம் நடத்துவார்கள் என நினைத்தால் அது முற்றிலும் தவறு.. பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிகதை

நம்முடைய வாழ்க்கையில் சரி, தவறு என இரு விஷயங்கள் இருக்கும். ஆனால், அதையும் தாண்டி அதனால் ஏற்படும் விளைவுகளை உளவியல் ரீதியாக சொல்ல முயற்சித்திருக்கும் படம்தான் ‘முப்பரிமாணம்’.

உருவத்திலும் நடிப்பிலும் குரலிலும் தன்னை ஆளே மாற்றிக்கொண்டு இருக்கிறார் ஷாந்தனு. அதனாலேயே மண்டபத்தில் பத்து பேரை அவர் அடித்து வீழ்த்தும்போது எளிதாக நம்மால் அதை நம்பமுடிகிறது. ஆரம்பகால காதல் காட்சிகளில் இயல்பான உருவத்தில் வந்தாலும் கூட அதிலும் ஷாந்தனுவின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தென்படுகிறது.. திரையில் நாம் பார்ப்பது ஷாந்தனுவைத்தானா என்கிற ஆச்சர்யம் விலகவே ரொம்ப நேரம் ஆகிறது..

இன்றைய காலகட்டத்தில், காதலிக்கும் பல இளம்பெண்களின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது என்பதை பளிச்சென தனது நடிப்ப்பால் படம்போட்டு காட்டியுள்ளார் சிருஷ்டி.. சிருஷ்டியின் அண்ணனாக வரும் ரவி பிரகாஷ் படம் முழுவதும் தனது முகத்தில் வன்மத்தை தேக்கி வைத்து நடித்திருக்கிறார்…

இவர்களது அப்பாவாக வரும் பெரைராவின் நடிப்பு வெகு யதார்த்தம். சினிமா நட்சத்திரமாக வந்து கதையின் திருப்பத்துக்கு காரணமாக அமையும் ஸ்கந்தா அசோக் அந்த கேரக்டரில் இயல்பாக பொருந்துகிறார். ஷாந்தனுவின் போலீஸ்கார அப்பா, அம்மா கேரக்டர்கள் படு பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.. அப்புகுட்டியை பயன்படுத்தி இருக்கும் அளவுக்காவது லொள்ளுசபா சுவாமிநாதனையும் பின்பாதி காட்சிகளில் வரும் தம்பி ராமையாவையும் பயன்படுத்தி இருக்கலாமே..?

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் நம்மை ஈர்க்கின்றன. குறிப்பாக 27 நடிகர்கள் இடம்பெறும் அந்த நியூ இயர் பாடலும் அதை படமாகிய விதமும் படத்துக்கு கூடுதல் பலம். ராசாமதியின் ஒளிப்பதிவு பொள்ளாச்சி, கேரளா என இரண்டு பகுதிகளிலும் வித்தியாசம் காட்டி விளையாடி இருக்கிறது..

இயக்குனர் அதிரூபனுக்கு எப்படியோ தெரியாது, ஆனால் ஒரு முழுமையான நடிகராக தன்னை வெளிப்படுத்திய சாந்தனுவுக்கு நிச்சயமாக இது ஒரு வெற்றிப்படம் தான். வழக்கமான ஒரு காதல் கதைதான். காதலுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தான் படம் என்றாலும், கதையின் திருப்பமாக காட்டப்படும் காட்சிகள் ஏற்கனவே சில படங்களில் நாம் பார்த்ததுதான் என்றாலும் அதனை புதிய பாணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் அதிரூபன்..

ஆனால் இறுதியில் அவர் சொல்லியிருக்கும் முடிவும் அதை நோக்கி கதையை நகர்த்தி இருக்கும் விதமும் தான் திரைக்கதையை பலவீனப்படுத்தி விடுகின்றன. அதேசமயம் இரண்டாம் பாதியை ஒரு த்ரில்லராக நகர்த்தி இருப்பதையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.