Search

Munnodi Movie Review

munnodi-3

அறிமுக இயக்குனர் எஸ்.பி.டி.ஏ குமார் டைரக்சனில் வெளிவந்திருக்கும் படம் தான் முன்னோடி.

சித்தாராவுக்கு இரண்டு மகன்கள்.. ஆனால் இளைய மகனுக்கு பிறந்தபோதே இதயத்தில் பிரச்சனை என்பது தெரியவர, அவனுக்கு அதிக கவனம் கொடுத்து வளர்க்கிறார்.. இதனால் மூத்தமகன் சத்யா (ஹரீஷ்) அம்மா மீது கோபமும் அம்மாவின் பாசத்தை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதாக தம்பியின் மீது வெறுப்புமாக வளர்கிறார்.

இளைஞனாக வளர்ந்த ஹரீஷ் சூழ்நிலையால் ஊரிலுள்ள தாதா மந்திர மூர்த்தியிடம் (அர்ஜுனா) சேர்கிறார். மந்திர மூர்த்தியின் மச்சான் ஜெயாவுக்கோ (பாவெல்) ஹரீஷை பிடிக்கவில்லை. ஊருக்கு புதிதாக வரும் கண்டிப்பான போலீஸ் அதிகாரி சௌந்திரபாண்டியன் (ஷிஜாய் வர்கீஸ்) இவர்களை என்கவுண்டரில் போட்டுத்தள்ள நேரம் பார்த்து காத்திருக்கிறார்.

இந்தநிலையில் தம்பியின் கல்லூரியில் படிக்கும் தேணுகா (யாமினி பாஸ்கர்) மீது காதலாகும் சத்யா அதற்கான முயற்சிகளில் இறங்க யாமினி பாராமுகம் காட்டுகிறார். ஆனால் சத்யாவின் தம்பி தனது அண்ணனை காதலிக்குமாறு தேணுகாவிடம் வேண்டுகோள் வைக்கிறார்.. அதுவரை தம்பியை வெறுத்த சத்யா, தம்பியின் நல்ல மனதை புரிந்துகொண்டு பாசமானவனாக மாறி குடும்பத்துடன் இணைகிறார். மந்திரமூர்த்தியிடம் இதை சொல்லிவிட்டு அவரிடம் இருந்து பிரிகிறார்.

மந்திரமூர்த்தியின் மச்சான் ஜெயாவோ, சத்யா போலீஸில் அப்ரூவர் ஆகிவிடுவார் என அவரை போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போடுகிறார். ஆனால் குறி தப்பி சத்யாவின் தம்பி பலியாகிறார். தம்பியின் மரணம் கண்டு கொதித்தெழும் சத்யா, ஜெயாவை பழி தீர்க்க புறப்படுகிறார்..

ஆனால் ஜெயாவோ சத்யாவை மந்திரமூர்த்தியிடம் வில்லனாக சித்தரித்து, சத்யாவுக்கு எதிரான கேடயமாக மந்திரமூர்த்தியையே பயன்படுத்தி அவரை அழிக்க நினைக்கிறார். இந்த மூவருக்கும் குறிவைத்து போலீஸ் அதிகாரி நெருங்குகிறார்.. ஒவ்வொருவரின் முடிவும் என்ன ஆனது என்பது விறுவிறுப்பான க்ளைமாக்ஸ்.

சத்யாவாக அறிமுக நடிகர் ஹரீஷ் கன கச்சிதமாக பொருந்தியுள்ளார். தம்பியிடம் கோபம், வளர்ப்பு அண்ணனிடம் விசுவாசம், தேணுகாவிடம் காதல் என கமர்ஷியல் அமசங்களை சரியாக செய்திருக்கிறார்.. ஆனால் போலீஸார் முன் ரொம்பவே உதார்விடும் அவரது சலம்பலை ஏற்க முடியவில்லை. தேணுகாவாக வரும் யாமினி பாஸ்கர் இந்தப்படத்திற்கு சரியான தேர்வு.. கொடுத்த வேலையை செவ்வனே செய்திருக்கிறார்.

‘கங்காரு’ படத்தில் முரட்டுத்தனமாக நாம் பார்த்த அர்ஜுனா, இந்தப்படத்தில் தாதா மந்திரமூர்த்தியாக உருவெடுத்து நம்மை அதிரவைக்கிறார். கோவிலில் வைத்து தன்னை கொல்ல வந்தவர்களை அவர் சமாளிக்கும் விதம் சரியான ஹீரோயிசம்.. முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்கும் மிடுக்கு அவரிடம் தென்படுகிறது. இனி அர்ஜுனாவை தேடி வாய்ப்புகள் தொடர்ந்து கதவை தட்டும் என்பது உறுதி.

ஏ.சி.பி சௌந்திரபாண்டியனாக மலையாள நடிகர் ஷிஜாய் வர்கீஸ்.. துடிப்பும் மிடுக்குமாக பார்வையிலேயே எதிரிகளுக்கு தண்ணி காட்டுகிறார்.. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு அவர் தரும் ட்ரீட்மெண்ட் செம. ஜெயாவாக வரும் பாவெல் எந்நேரமும் நக்கல் புன்னகையும் எகத்தாள பேச்சுமாக கலக்குகிறார். சித்தாராவும் ஹரீஷின் தம்பியாக நடித்தவரும் மனதில் நிறைகிறார்கள்..

பிரபு ஷங்கரின் இசையும் வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவும் இணைந்து செயல்பட்டு படத்தை விறுவிறுப்பாக்கி இருக்கின்றனர்.. ஒரு அறிமுக இயக்குனர் போல இல்லாமல் கைதேர்ந்த இயக்குனராக கமர்ஷியலாக இந்தப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் குமார்.. ஹரீஷின் தம்பி கொலையில் அவர் வைத்திருக்கும் ட்விஸ்ட் எதிர்பாராதது. படத்தில் காதல் காட்சிகளும் நண்பர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளும் மட்டும் தான் அவ்வப்போது கொஞ்சம் வேகத்தடை போடுகின்றன.

மற்றபடி ஒரு பொழுதுபோக்கு கமர்ஷியல் படத்துக்குண்டன அனைத்து அம்சங்களும் இந்தப்படத்தில் இருக்கின்றன என்கிற விதத்தில் படம் பார்க்கும் ரசிகனுக்கு நம்பிக்கை தந்திருக்கிறார் இயக்குனர் குமார்.