Search

Mr Monster Movie Review

செம ஜாலியான, கலகலப்பான, சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான முயற்சி சொல்லும் படம் தான் மான்ஸ்டர்..

வள்ளலார் இல்லத்தில் படித்து வளர்ந்ததாலோ என்னவோ சிறுவயதிலிருந்தே அனைத்து உயிர்களிடமும் இரக்கம் காட்டுகிறார் நாயகன் எஸ்.ஜே.சூர்யா. சில காரணங்களால் இவரது திருமணம் தடைபட்டுக்கொண்டே போகிறது.

monster-review

தன்னுடன் ஒன்றாக பணிபுரியும் கருணாகரனின் ஆலோசனைப்படி சொந்த வீடு வாங்கி விட்டு, திருமணம் செய்ய நினைக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதன்படி சொந்தவீடு வாங்கிய நேரமோ என்னமோ, இவரை முதலில் வேண்டாம் என்று சொன்ன ப்ரியா பவானி சங்கர் இவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார்.

நல்ல குணம், சொந்த வீடு, மனைவியாக வரப்போகும் அழகான பெண் என அடுத்து வரும் நாட்கள் இவருக்கு ஜாலியாகத்தானே நகரவேண்டும். ஆனால் தினசரி ஒரு பிரச்சனை புதிது புதிதாக இவரை தேடி வருகிறது அதுவும் வீட்டிற்குள் புகுந்து கொண்ட ஒரு எலியால்..

எலியை துரத்துவதற்கு எஸ்.ஜே.சூர்யா எடுக்கும் நடவடிக்கைகளும் அதே வீட்டில் முன்பு குடியிருந்த ஒரு வைர கடத்தல்காரன் அங்கே விட்டுவிட்டுச் சென்ற தனது வைரத்தை கைப்பற்றுவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளும் தான் மீதி படம்.

வீட்டிற்குள் புகுந்த ஒரு எலியால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா, அதை ஏன் இவ்வளவு அழகாக படமாக்க முடியுமா என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள்.

இந்த கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை தன்னை அழகாக காதுக்குள் நுழைத்துக் கொண்டிருக்கிறார் நாயகன் எஸ்.ஜே.சூர்யா. தனக்கு திருமணம் தள்ளிப்போவதைக் கூட இயல்பாக எடுத்துக்கொள்ளும் மனப்போக்கையும் அவ்வளவு தொல்லைகள் கொடுத்தது எலியை கருணையுடன் அணுகுவதையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். பிரியா பவானி சங்கருடன் யதார்த்தமான ரொமான்ஸிலும் கருணாகரனுடன் சேர்ந்து காமெடியிலும் கலக்கியுள்ளார் மனிதர்.

தன்னை பெண் பார்க்க வந்தவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு பின் அவரது நல்ல குணம் தெரிந்து அவரை காதலிக்கும் க்யூட்டான கதாபாத்திரத்தில் ப்ரியா பவானி சங்கர்.. பார்க்கப்பார்க்க அழகாகவே இருக்கிறார்.

நீண்ட நாளைக்கு பிறகு கருணாகரனுக்கு மீண்டும் அழகான காமெடி டிராக். படம் முழுவதும் மிக சிறப்பாக தன்னுடைய வேலையை செய்திருக்கிறார்.

இவர்கள் மூவரையும் தவிர படம் முழுவதும் வரும் முக்கியத்துவம் வாய்ந்த, கதாபாத்திரத்தில் அந்த ஒற்றை எலி செம ஷார்ப் காட்டியிருக்கிறது. அதிலும் கிராபிக்ஸ் ஜாலகங்கள் இல்லாமல் ஒரிஜினல் எலியை வைத்து படமாக்கியிருப்பது கதையுடன் நம்மை அழகாக ஒன்ற வைக்கிறது.

இந்த படத்தில் வைரக்கடத்தல் செய்யும் வில்லனாக வரும் அணில்குமார் அந்த கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு என்று நிரூபிக்கிறார்.

ஒரு எலி தான் என்றாலும் அதற்கும் கூட கிட்டத்தட்ட வில்லனுக்கு இணையான பின்னணியில் இசையால் மிரட்டியிருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன். எலிக்குழந்தைகளின் பாடலும் படமாக்கப்பட்ட விதமும் அருமை. குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்.

கோகுல் பினாயின் ஒளிப்பதிவு இந்த படத்திற்கு ரொம்பவே பக்கபலம். குறிப்பாக எலி சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட காட்சிகளில்.

வழக்கமாக பார்த்து வந்த படங்களில் இருந்து மாறுபட்ட கதையை கையிலெடுத்து, அதற்கு அழகாக திரைக்கதை அமைத்து, தேவைப்பட்ட இடங்களில் எதிர்பாராத சில திருப்பங்களுடன் அழகாக இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.

இந்த சம்மர் சீஸனுக்கு குழந்தைகளுடன் சென்று குதூகலித்து பார்க்கவேண்டிய படம் இந்த மான்ஸ்டர் என்றால் அது மிகையல்ல