Search

Mersal Movie Review

Mersal2

ஓரளவு சுமாரான வெற்றிபெற்ற, ஆனால் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக பில்டப் கொடுக்கப்பட்ட தெறி படத்தை தொடர்ந்து, விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது படம் தான் மெர்சல்.. இந்தமுறையும் ஏகப்பட்ட பில்டப்புகளுடன் களமிறங்கியுள்ள இந்த கூட்டணி விஜய் ரசிகர்களையும் தாண்டி பொதுவான ரசிகனையும் மெர்சலாக்கியதா..? பார்க்கலாம்.

அஞ்சு ரூபாய் மட்டுமே பீஸ் வாங்கிக்கொண்டு சிகிச்சை அளிக்கும் டாக்டர் மாறன் (விஜய்). வெளிநாட்டில் நடைபெறும் மருத்துவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட சமயத்தில் சென்னையை சேர்ந்த பிரபல டாக்டர் ஹரீஷ் பெராடியை மேஜிக் நிகழ்ச்சியில் வைத்து கொல்கிறார்.. டாக்டரின் நண்பரான கோடீஸ்வர டாக்டரான எஸ்.ஜே.சூர்யாவையும் அடுத்த டார்கெட்டாக குறிவைக்கிறார். ஆனால் கொலை செய்ததும் அடுத்த கொலையை செய்ய தயாராக இருப்பதும் மாறனை போல உருவமுள்ள மேஜிக்மேன் வெற்றி (இன்னொரு விஜய்) என்பது தெரியவருகிறது.

நாம் எதிர்பார்த்தது போலவே பிளாஸ்பேக்கில் இவர்கள் இருவரின் தந்தையான கிராமத்து தளபதி (அவரும் விஜய் தான்) தனது மனைவி நித்யாமேனனோடு சேர்ந்து பொதுநலநோக்கோடு மருத்துவமனை கட்டியதும், அதில் டாக்டர்களாக பணியாற்ற வந்த எஸ்.ஜே.சூர்யாவும் ஹரீஸ் பெராடியும் மருத்துவ சேவையை வியாபாரமாக்க தளபதியை போட்டுத்தள்ளிவிட்டு மருத்துவமனையை கைப்பற்றுவதும் நடக்கிறது.

தந்தையின் சாவுக்கு பழிதீர்ப்பதுடன் மக்களுக்கு இலவச மருத்துவம் கொடுக்கவேண்டும் என்கிற அவசியத்தையும் வலியுறுத்தி படத்தை முடித்திருக்கிறார்கள்..

முதன்முதலாக மூன்று வேடங்களில் விஜய்.. இதில் கிராமத்து தளபதி விஜய் நடிப்பிலும் உடல்மொழியிலும் தனித்து தெரிகிறார். மற்ற இரண்டு விஜய்களின் நடிப்பு, உருவம் எல்லாம் ஒரேபோல இருப்பதால் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. மருத்துவம் தொடர்பாக படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை விஜய் மருத்துவம் பற்றி கேட்கும் கேள்விகள் எல்லாம் நெத்தியடி.

சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மூன்று நாயகிகளில் முதல் இருவர் கண்களுக்கு விருந்தளிக்க, பிளாஸ்பேக்கில் வரும் நித்யா மேனன் தனது நடிப்பால் நம் மனதை அள்ளுகிறார். ஸ்பைடரில் பார்த்த கேரக்டருக்கு நேர்மாறாக ஆனால் குறைவான வாய்ப்பே கொடுக்கப்பட்ட வில்லனாக எஸ்.ஜே.சூர்யா கிடைத்த இடத்தில் நடிப்பில் துடிப்பு காட்டுகிறார். கட்டப்பாவாக கலக்கிய சத்யராஜை ‘சும்மா கிடப்பா’ என் ஒப்புக்கு சப்பாணியாக வேலை வாங்கியதைத்தான் ஏற்கவே முடியலை பாஸ்.

துணை வில்லனாக நடித்துள்ள ஹரீஷ் பெராடியும் ஒகே தான். வடிவேலு இருந்தாலும் அவரது பிராண்ட் காமெடி என எதுவும் இல்லாதது ஒரு குறை.. ஆனால் சென்டிமென்ட்டில் புதுமுகம் காட்டியுள்ளார் மனிதர்.. யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன் இருவரும் நட்புக்காக கொஞ்ச நேரமே வந்து போகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ரசிகர்களுக்கு தீனி போடும் பாடல்கள் தான் என்றாலும் எதுவும் மனதில் வைத்து ரிப்பீட் கேட்கும் ரகம் இல்லை என்பதையும் சொல்லியாகவேண்டும்.

படத்தின் நீளம் ரொம்ப அதிகமாக இருந்தாலும், ஒன்றுக்கு மூன்றாக விஜய்கள் இருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்கான உணர்வு படம் முழுதும் இருக்கிறது. ‘வழக்கமான விஜய்யின் அதிரடி காட்சிகள் என ஒன்று கூட இல்லாதது, விஜய் ரசிகர்களை தாண்டி பொதுவான ரசிகர்களுக்கு ஒரு மனக்குறை தான்.

டெக்னாலஜி எதையும் இதில் பெரிதாக பயன்படுத்தாமல், மேஜிக்கை பயன்டுபடுத்துவதாக கூறி மேஜிக்மேன் விஜய்யை மந்திரவாதியாகத்தான் ஆக்கியுள்ளார் அட்லீ.. அந்த அளவுக்கு லாஜிக் மீறல்கள் படத்தில் நிறைய உண்டு.

ஒரு டாக்டர் கெட்டவனா இருக்க கூடாது. கெட்டவனா இருக்கிறவன் டாக்டரா இருக்க கூடாது என்கிற ஒன்லைனை வைத்து ரசிகர்கர்களை மெர்சலாக்க முயற்சித்திருக்கிறார்கள். ஒரு படத்தை மட்டுமே காப்பியடித்ததாக யாரும் சொல்லிவிடக்கூடாது ன்பதால், ரமணா, அபூர்வ சகோதரர்கள், விஜய்யின் திருப்பாட்சி (தண்ணி டேங்க் காட்சி) என காட்சிக்கு காட்சி தனித்தனியாக சுட்டிருக்கிறார் அட்லீ.

அட்லீ எத்தனை வருடங்கள் சினிமாவில் நீடிப்பார் என்பது நமக்கு தேவையில்லாத ஒன்று.. ஆனால் விஜய் சார் நீங்கள் இன்னும் பல வருடங்களுக்கு மாஸ் ஹீரோவாக வலம் வர வேண்டுமென்றால் இதுபோன்ற பலதடவை அரைத்த, புளித்த மாவு கதைகளை கேட்டதுமே ரிஜெக்ட் பண்ணிவிடுவது தான் உங்கள் திரையுலக எதிர்காலத்திற்கு நல்லது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *