Search

Mehandi Circus Movie Review

mehandi-circus-review

கொடைக்கானலை சேர்ந்த ரங்கராஜ், வசதியான வீட்டுப்பிள்ளை என்றாலும் தனக்குப் பிடித்தமான கேசட் ரெக்கார்டிங் சென்டர் நடத்தி வருகிறார். இந்த சமயத்தில் அந்த ஊருக்கு மெஹந்தி என்கிற சர்க்கஸ் கம்பெனி வருகிறது அதில் மிகவும் ரிஸ்க்கான ஒரு சாகசத்தில் ஈடுபடும் ஸ்வேதா திரிபாதி (மெஹந்தி)யை பார்த்ததுமே ரங்கராஜூக்கு பிடித்துப்போகிறது.. சில பல முயற்சிகளுக்குப் பின்பு ஒருவழியாக ஸ்வேதாவின் காதலையும் பெறுகிறார்.

அதை தொடர்ந்து ஸ்வேதாவின் தந்தையிடம் நேரடியாக சென்று பெண் கேட்கிறார் ரங்கராஜ்.. ஆனால் ஸ்வேதாவின் தந்தையோ புத்திசாலித்தனமாக ஸ்வேதாவை வைத்து ரிஸ்க் எடுத்து செய்யப்படும் சாகச நிகழ்ச்சியை ரங்கராஜ் சரியாக செய்து விட்டால் அவளை திருமணம் செய்து தருவதாக கூறுகிறார்.

ஸ்வேதாவை ஒரு அட்டையின் முன்னால் நிறுத்தி வைத்து அவருக்கு எதிரே நின்று குறிபார்த்து அவர் உடலை சுற்றி 9 கத்திகளை வீசுவதுதான் அந்த சாகச நிகழ்ச்சி.. எந்த பயிற்சியும் இல்லாத ரங்கராஜ் இந்த சவாலுக்கு ஒப்புக் கொண்டாரா..? இல்லை தனது சவால் காதலியின் உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என போட்டியில் இருந்து ஒதுங்கினாரா..? இதை தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள் தான் மீதிக்கதை..

கொடைக்கானல் மலைப்பகுதியும் இளையராஜாவின் இசையுமாக நம்மை தொண்ணூறுகளின் காலகட்டத்துக்கே கடத்தி சென்று விடுகிறார்கள் இயக்குனர் சரவணன் ராஜேந்திரனும், ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும். புதுமுக நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் பார்ப்பதற்கும் படத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் பார்ப்பதற்கும் மொத்தம் மூன்று விதமான ஆளாக தெரிகிறார் இதில் நரைத்த தலையுடன் வரும் கெட்டப்பில் மிகவும் பக்குவப்பட்ட நடிகராக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றபடி கதாநாயகியுடன் காதல் காட்சிகள் எல்லாம் வழக்கமான ரகம்தான்.

வடநாட்டிலிருந்து வந்து சர்க்கஸ் நடத்தும் பெண்ணாக மெஹந்தி என்கிற அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு தான் ஸ்வேதா திருபாதி.. அதற்கேற்ற மாதிரி பல காட்சியில் கண்களாலேயே பேசுகிறார். கத்தி வீசி சவாலில் வென்று தன்னை அழைத்துச் சென்ற விடமாட்டானா தன் காதலன் என கண்களில் ஏக்கத்தை காட்டுவதில் சபாஷ் பெறுகிறார் ஸ்வேதா.

நாயகனின் நண்பனாக வரும் ஆர்.ஜே.விக்னேஷ் ஒரு சில இடங்களில் காட்சியமைப்பால் மட்டுமே சிரிக்க வைக்கிறார். நாயகனின் தந்தையாக ஜாதிவெறி பிடித்த மனிதாராக அந்த கேரக்டரில் நடிகர் மாரிமுத்து ஏக பொருத்தம். அதற்கேற்றபடி அவருக்கு அமையும் முடிவும் கனகச்சிதம்.. சர்ச் பாதராக வந்து காதலுக்கு மரியாதை செய்யும் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இவர்களை எல்லாம் தாண்டி கவனிக்க வைக்கிறார் சர்க்கஸ் கம்பெனியை நடத்தும் தலைவரான மெஹந்தியின் தந்தையாக நடித்து இருக்கும் சன்னி சார்லஸ். கண்களாலேயே மிரட்டுகிறார் மனிதர். இவரை தமிழ் சினிமா இனி தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் அதேபோல ஸ்வேதாவின் முறைமாமன் ஜாதவ் ஆக வரும் அன்கோர் விகாலும் எதார்த்தமான நடிப்பில் காதலுக்கு உதவும் காட்சிகளில் அட இப்படியும் ஒரு ஆளா என நம்மை கவனிக்க வைக்கிறார்.

படத்தின் இசை ஷான் ரோல்டன் தான் என்றாலும் அதில் பாதி இடத்தை இளையராஜாவின் இசையை அடைத்துக் கொள்கிறது.. அந்த அளவுக்கு படத்தில் அடிக்கடி இளையராஜா பாடல்கள் அடிக்கடி ஒலிக்கின்றன.

தொண்ணூறுகளின் காதலுக்கு என்ன விதமான சிக்கல் ஏற்படும் என்பதை ஒரு புதிய கோணத்தில் அணுகி இருக்கிறார் கதாசிரியர் ராஜூமுருகன் அங்கங்கே சில இடங்களில் சரிவு ஏற்பட்டாலும் கிளைமாக்ஸில் அனைவரும் சந்தோசமாக ஏற்கும்படியான புதுக்கவிதையான ஒரு முடிவை சொல்லி திருப்தியுடன் நம்மை அனுப்பி வைக்கிறார் இயக்குனர் சரவண ராஜேந்திரன்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *