Search

Lakshmi Film Review

lakshmi-review

குழந்தைகள் எதுவாக விரும்புகிறார்களோ அவர்களை அதுவாகவே ஆகிவிடுங்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி முழுக்க முழுக்க நடன பின்னணியில் வெளியாகி இருக்கும் படம் தான் ‘லக்ஷ்மி’..

பேபி தித்யாவுக்கு நடனம் என்றால் உயிர். ஆனால் கணவனை இழந்து, மக்களுடன் தனியாக வசிக்கும் ஐஸ்வர்யாவோ சில காரணங்களால் இதனால் மகளை டான்ஸ் பக்கமே செல்லவிடாமல் தடுக்கிறார். ஆனாலும் அம்மாவுக்கு தெரியாமல் பள்ளிக்கு போய்வரும் வழியில் ரெஸ்டாரண்ட் நடத்தும் பிரபுதேவாவை ப்ரண்ட்ஷிப் பிடித்து அவர்மூலமாக, இந்திய அளவில் நடைபெறும் நடன போட்டியில் கலந்துகொள்ள உள்ளே நுழைகிறார்.

ஆனால் ஆடிஷனின்போது ஏற்படும் சொதப்பல்களால் தித்யா டீமிலிருந்தே வெளியேறும் சூழல் உருவாக இந்த இடத்தில் பிரபுதேவா இந்த பிரச்சனையில் குறுக்கிடுகிறார். ஆனாலும் தித்யாவும் அவரது சென்னை டீமும் போட்டியில் கலந்துகொள்ளவேண்டுமென்றால் பிரபுதேவாவுக்கு நிபந்தனை விதிக்கிறார் போட்டியை நடத்தும் மும்பை அணியின் கோச் யூசுப் கான்.

அது என்ன நிபந்தனை.? நிபந்தனையை பிரபுதேவா ஏற்றாரா..? உண்மையில் பிரபுதேவா யார்..? தித்யாவை மும்பை போட்டியில் கலந்துகொள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் அனுமதித்தாரா..? நடனத்தை அவர் ஏன் வெறுக்கிறார் என்பது உட்பட பல கேள்விகளுக்கு மீதிப்படம் விடை சொல்கிறது.

குழந்தைகளை ஊக்கப்படுத்தி போட்டிகளில் கலந்துகொள்ள செய்யும் பிரபுதேவாவுக்கு ரொம்பவே பொருத்தமான கேரக்டர்.. பாட்ஷா எபக்டில் அவரது கேரக்டர் சஸ்பென்ஸை உடைத்தவர் அதை இண்டர்வெல்லாக வைத்திருக்க வேண்டாமா..? லக்ஷ்மியாக வரும் பேபி தித்யா முதல் காட்சியிலிருந்தே நம் மனதை ஆக்கிரமிக்கிறார். வகுப்பறையில், ரெஸ்ட்டாரெண்டில் , பஸ்ஸில் என அவர் செய்யும் சேட்டைகள் எல்லாம், லாஜிக்கை மீறியவை என்றாலும் ரசிக்க முடிகிறது. ஆனால் அப்படிப்பட்டவருக்கு ஸ்டேஜில் ஆடுவதற்கு பயம் என்றால் நம்ப முடியவில்லை.

அம்மா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் கச்சிதம் என்றாலும் அவருக்கான வேலை குறைவு தான்… எந்த அம்மா தனது குழந்தையை இவ்வளவு கேர்லெஸ்ஸாக விடுவார்.. அவரது கேரக்டர் வடிவமைப்பில் உள்ள குறைகளை இன்னும் சரிசெய்து இருக்கலாம். சென்னை டீமின் கோச்சாக வரும் சோபியா தமிழுக்கு நல்லதொரு அறிமுகம்.. கருணாகரனுக்கும் ஜார்ஜூக்கும் காமெடி செய்வதற்கு குறைவான வாய்ப்பு தான்..

அர்ஜூனாக வரும் சிறுவனைவிட, அர்னால்டு என்கிற பெயரில் அட்டகாசம் செய்யும் அந்த குண்டுப்பையன் கலக்குகிறான். சல்மான் யூசுப் கானின் கேரக்டரில் வில்லத்தனத்தை வலிந்து திணித்திருப்பது நன்றாகவே தெரிகிறது.. லாஜிக்கே இல்லை என்பதால் பள்ளி முதல்வராக வரும் கோவை சரளாவின் சேஷ்டைகளை சகிக்க முடியவில்லை.

டான்ஸ் போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளும் அதை ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா படமாக்கிய விதம் கூடவே தான். சாம் சி.எஸ்ஸின் இசையும் பாடல்களும் பத்தின் தூண்களாக தாங்கிப்பிடிக்கின்றன. குழந்தை கண்காணிப்பு விஷயத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடந்துகொள்ளும் விதமும், அம்மாவுக்கு குழந்தை டிமிக்கி கொடுக்கும் விதமும் நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்பதால் மனதில் ஒரு குறையாகவே நின்றுவிடுகிறது.

அதேசமயம் இத்தனை குழந்தைகளை கட்டி மேய்த்து இந்தப்படத்தை சுவாரஸ்யம் குறையாமல் எடுத்திருப்பதே மிகப்பெரிய சாதனை தான்.

குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் தனது நடனத்தால் கவர்கிறாள் இந்த லக்ஷ்மி .