Search

Koottathil Oruthan Film Review

koottaththil-oruththan

கூட்டத்தில் ஒருத்தனாக இருப்பவனால், பலரும் பாராட்டும் விதமாக ஆயிரத்தில் ஒருவனாக மாற முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.. மிடில் பெஞ்ச் மாணவனான அசோக் செல்வன், பள்ளிப்பருவத்திலிருந்து வளர்ந்த பின்னும் ஆவரேஜ் ஸ்டூடன்ட் ஆக தாழ்வு மனப்பான்மையால் தவிக்கிறார்.

ஒருநாள் முன் பின் தெரியாத, பிரியா ஆனந்த் அவரது செயல் ஒன்றை பாராட்,ட அன்றுமுதல் உற்சாகமாகும் அசோக் ப்ரியா மீது காதலாகிறார் காதலை தொடர.. அவர் சேரும் கல்லூரியிலேயே இவரும் சேர்கிறார்.. கல்லூரியில் எடுத்த எடுப்பிலேயே காதலை சொல்ல முயல்கிறார்.. ஆனால் பிரியாவோ அவரை யார் எறேன்று கேட்கிறார்.

அந்த அளவுக்கு வகுப்பிலேயே யார் என தெரியாதபடி இருக்கும் இவரைத்தேடி ப்ரியாவே வரும் விதமாக, சூழல்களும் நிகழ்வுகளும் அசோக் செல்வனை பிரபலமாக்குகின்றன.. ஆனால் இந்த நிகழ்வுகள் அனைத்துமே, தான் ஏற்கனவே உதவிய தாதா சமுத்திரக்கனி, தனக்காக செய்த ஏற்பாடுகள் என தெரியவர அதிர்ச்சியாகிறார் அசோக் செல்வன்..

பொய்யே பிடிக்காத ப்ரியாவிடம் இந்த உண்மையை சொல்ல நினைக்கும் வேளையில், சமுத்திரக்கனி எதிரிகளால் கொல்லப்பட, பழியில் சிக்கி சிறைசென்று மீள்கிறார் அசோக் செல்வன்.. அதன் விளைவாக காதலி, கல்லூரி, தந்தை என அனைவரும் வெறுத்து ஒதுக்கிய நிலையில் சென்னையை விட்டு வெளியேறுகிறார் அசோக் செல்வன்..

மூன்று வருடங்கள் கழித்து அவர் நிலை என்ன என அறியவரும்போது, வேறு ஒரு திருமணத்துக்கு தயாரான பிரியா ஆனந்த் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.. அப்படி அசோக் செல்வன் செய்த காரியம் என்ன..? அவரால் ஆயிரத்தில் ஒருத்தனாக மாற முடிந்ததா..? என்பதற்கு க்ளைமாக்ஸ் நெகிழ்வாக விடை தருகிறது.

இத்தனை நாட்களுக்கு பிறகு அசோக் செல்வனுக்கு கனமான கேரக்டர் கிடைத்துள்ளது. அவரும் அதை அழகாக சுமந்துள்ளார்.. தாழ்வு மனப்பான்மை என்கிற குறையை காட்சிக்கு காட்சி தனது யதார்த்த நடிப்பால் பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறார் மனிதர்.

எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் கேரக்டரில் பிரியா ஆனந்த்.. அசோக்கின் காதலை அவர் நிராகரிப்பதும் பின் ஏற்றுக்கொள்வதற்குமான காரணங்களை தனது இயல்பான நடிப்பில் வெளிப்படுத்துகிறார். அசோக் செல்வனின் நண்பனாக அளவு மீறாத காமெடியில் ரசிக்க வைக்கும் பாலசரவணன் கைதட்டலை அள்ளுகிறார்.

தாதா கேரக்டரில் நடித்துள்ள சமுத்திரக்கனியின் பாத்திரம் கதைக்குள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது போலவே தெரிகிறது. இருந்தாலும் அதை நேர்த்தியாக செய்திருக்கிறார் சமுத்திரக்கனி.. நடுத்தர குடும்பத்து கண்டிப்பான அப்பாவாக மாரிமுத்து, போலீஸ் அதிகாரியாக ஜான் விஜய், பேராசிரியாக பகவதி பெருமாள், கல்லூரி முதல்வராக நாசர் என துணை கேரக்டர்கள் எதுவும் சோடை போகவில்லை..

நிவாஸ் பிரசன்னாவின் இசையில் ‘ஏண்டா இப்படி, ‘இன்னும் என்ன சொல்ல’ ஆகிய பாடல்கள் இதம்.. பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் கல்லூரி காட்சிகள் மனதை அள்ளுகின்றன. தாழ்வு மனப்பான்மை, மிடில் பெஞ்ச் என்கிற நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு என ஒரு படத்தை எடுத்துள்ள இயக்குனர் ஞானவேல், அதற்கு மட்டுமே தீர்வு சொல்லியிருந்தால் அது சாதாரண படமாக இருந்திருக்கும்..

ஆனால் இன்று சமூகத்தின் அவலமாக மாறிவிட்ட ‘ஏழைகளின் பசி’ என்கிற இன்னொரு விஷயத்தையும் பொட்டில் அடித்த மாதிரி கருத்தையும் சொன்னதற்காக நம் மனதில் நிற்கிறார் இயக்குனர் ஞானவேல்..

கூட்டத்தில் ஒருத்தனாக இருப்பவன் கூட ஆயிரத்தில் ஒருவனாக மாறமுடியும் என்கிற கருத்தை பழையசோறு தான் என்றாலும் கூட கொஞ்சம் புதுமாதிரியாக அலங்கரித்து தர முயன்றிருக்கிறார் ஞானவேல்.