Search

Karuppan Movie Review

Karuppan Review

தொண்ணூறுகளின் புகழ்பெற்ற கிராமத்து பின்னணி, காளையை அடக்குதல், பந்தயத்தில் ஜெயித்தால் பெண்ணை தருவது என்கிற கான்செப்ட்டில் பெரிய அளவில் லேட்டஸ்ட் சமாச்சாரங்களை திணிக்காமல் யதார்த்தமான ஒரு கிராமத்து கதையை தந்துள்ளார் இயக்குனர் பன்னீர் செல்வம்.

யாராலும் அடக்கவே முடியாத பசுபதியின் காளையை அடக்குகிறார் மாடுபிடி வீரரான விஜய்சேதுபதி. காளையை அடக்குவதற்கு முன், தான் கொடுத்த வாக்குப்படி தனது தங்கை தான்யாவை விஜய்சேதுபதிக்கு திருமணம் செய்து வைக்கிறார் பசுபதி. விஜய்சேதுபதியின் நல்ல மனதறிந்து சந்தோஷமாக திருமணம் செய்கிறார் தான்யா. ஆனால் சின்னவயதில் இருந்தே தான்யா தனக்குத்தான் என காத்திருக்கும் முறைமாமன் பாபி சிம்ஹாவுக்கு தலையில் இடி விழுந்தது போல் ஆகிறது.

இதனால் விஜய்சேதுபதிக்கும் பசுபதிக்கும் இடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்தி, அதை கொஞ்சம் கொஞ்சமாக ஊதி பெரிய நெருப்பாக்குகிறார். இந்த களேபரத்தால் வெறுத்துப்போய் தான்யா புகுந்த வீடு வந்துவிட, இதை சாக்காக வைத்து ஒருகட்டத்தில் விஜய்சேதுபதியை போட்டுத்தள்ளவும் பசுபதியை சம்மதிக்க வைக்கிறார் பாபி சிம்ஹா.

இதன்மூலம் தான்யாவை அடைய நினைக்கும் பாபி சிம்ஹாவின் திட்டம் நிறைவேறியதா..? இல்லை சதியை வென்று விஜய்சேதுபதி-தான்யா ஒன்று சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.

விஜய் சேதுபதி இதுவரை சென்னை வட்டார மொழியில் கலக்கியவர் மதுரை தமிழிலும் மிரட்டுகின்றார். குடித்துவிட்டு பாபி சிம்ஹா அனுப்பும் ஆட்களை நடனமாடிக்கொண்டே அடிக்கும் இடத்திலும் சரி, தான்யாவுடன் ஒரு கணவனாக அவர் செய்யும் கலாட்டாவும் சரி எப்போதும் போல் கலக்கல் ரகம் தான்.

கிராமத்துக்கதை என்பதால் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும். என்பதை நிரூபிக்கும் விதமாக தான்யா ஜாடிக்கேத்த மூடியாக விஜய்சேதுபதிக்கு ஜோடியாக, மனைவியாக செமையாக செட்டாகி இருக்கிறார். அவருக்கும் பசுபதிக்குமான் அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட் ரொம்ப நல்லாவே ஒர்க்அவுட் ஆகியிருக்கு. அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படத்தில் இனி இவர் கமிட் ஆனாலும் ஆச்சரியமில்லை.

பாபிசிம்ஹாவுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கேரக்டர், திருமணமாகி சென்றாலும் முறைப்பெண்ணை அடைந்தே தீருவேன் என்று அவர் செய்யும் வில்லத்தனம், கடைசி நொடியில் கூட ஐ லவ் யூ என்று அவர் சொல்வது செம்ம. ஹீரோ ஆசையை ஒதுக்கி இப்படி தேர்ந்தெடுத்து நடித்தால் மீண்டும் நல்ல எதிர்காலம் தான்.

தனக்கு கொடுக்கப்பட்ட ‘மாயி’ கேரக்டருக்குள் தன்னை நுழைத்துக்கொண்டுள்ளார் பசுபதி. தனது தங்கையை திருமணம் செய்துகொடுக்க விஜய்சேதுபதிக்கு வக்காலத்து வாங்கும் அவரே, காலப்போக்கில் அவரை கொலைசெய்ய துணியும் அளவுக்கு சூழ்நிலைக்கைதியாக தன்னை மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார்.

துணை வில்லனாக வரும் சரத் லோஹித்ஸ்வா மற்றும் லிங்கா அன் கோ அணுகுண்டு வெடிப்பதுபோல வந்து புஸ்வாணம் போல ஆகிவிடுகிறார்கள். பசுபதியின் மனைவியாக நீண்ட நாளைக்குப்பின் தலைகாட்டியுள்ளார் ‘சமுத்திரம்’ பிரதர்ஸின் தங்கச்சி காவேரி. பாபி சிம்ஹாவுடன் இருந்து அவருக்கு தூபம் போடுவதுடன், ஒவ்வொரு முறையும் தனது குதர்க்கமான பேச்சால் விஜய்சேதுபதிக்கும் பசுபதிக்கும் சண்டை இழுத்துவிடும் சகுனி வேலையை படம் முழுதும் ‘கருப்பன் குசும்புக்காரன்’ பெரிசு நன்றாகவே செய்துள்ளார்.

இயக்குனர் பன்னீர் செல்வம் கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து அவர்களிடம் அழகாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக விஜய் சேதுபதியை திறமையாக உபயோப்படுத்தி இருக்கிறார். விஜய்சேதுபதி, சிங்கம்புலி சம்மந்தப்பட்ட காட்சிகள் தியேட்டரில் அதகளப்படுத்துகிறது. இமானின் இசையில் .பாடல்களும் ஓரளவு இனிமைதான்.. இருந்தாலும் டூயட்டுகளின் எண்ணிக்கையில் ஒன்றை குறைத்திருக்கலாம்.

ஹீரோ ஏன் இதை சொலவில்லை, நாயகியின் அண்ணன் ஏன் இதை கேட்கவில்லை என சில இடங்களில் லாஜிக் இடறல்கள் இருந்தலும், அதையும் மீறி கருப்பனை ரசிக்க முடிவதுதான் படத்தின் பலம்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *