Search

Botha Film Review

bodha-movie-review

சினிமாவில் ஹீரோவாகிவிட வேண்டும் என்கிற கனவுடன் சான்ஸ் தேடி அழைக்கிறார் விக்கி.. அவரது ரூம் மேட்டான மிப்பு, சொந்தமாக மொபைல் கடை நடத்துகிறார். இவர்கள் இருவருக்கும் வீட்டை உள் வாடகைக்கு விடுகிறார் டீனேஜ் ராகுல் தாத்தா. சினிமா வாய்ப்பு கிடைப்பது தாமதமாகவே புரோக்கர் மூலமாக வசதியான வீட்டுப்பெண்களை திருப்திப்படுத்தும் ஆண் பாலியல் தொழிலாளி வேலையை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்கிறார் விக்கி.

மொபைல் சர்வீஸ் செய்யும்போது, ஒரு கோடீஸ்வரரின் போன்காலை ஒட்டுக்கேட்ட மிப்புவுக்கு அவர் வீட்டில் இரண்டுகோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவருகிறது. அதை எப்படி அபேஸ் பண்ணலாம் என யோசிக்கையில், அந்த வீட்டுப்பெண், விக்கியை தனது ஆசைக்கு பயன்படுத்த வரச்சொல்லி இருப்பதும் ஏதேச்சையாக தெரிய வருகிறது.

உடனே விக்கியுடன் சேர்ந்து அந்த வீட்டில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார் மிப்பு.. ஆனால் விக்கி அந்த வீட்டுக்கு சென்ற நேரம் அந்தப்பெண் திடீரென கொலை செய்யப்படுகிறார். இரண்டு கோடி ரூபாய் பணமும் களவு போயிருக்கிறது.. தப்பிக்கும் நேரம் பார்த்து போலீஸ் வர, கையும் களவுமாக சிக்குகிறார் விக்கி.

அந்தப்பெண் கொலைக்கு காரணமானவர் யார்..? அந்தப்பணம் எப்படி மாயமானது..? விக்கி தன்னை நிரபராதி என நிரூபிக்க முடிந்ததா என பல கேள்விகளுக்கு இடைவேளைக்கு பின்பகுதி விடை சொல்கிறது.

போத என்கிற டைட்டிலை பார்த்து இது குடிமகன்களுக்கான படம் என்றோ, கொலை, கொள்ளை என்றதும் க்ரைம் படம் என்றோ நினைத்துவிட வேண்டாம்.. மொத்தப்படத்தையும் காமெடி கலந்து ஜாலியாகவே படமாக்கி இருக்கிறார்கள்.

கதாநாயகனாக விக்கி.. சரி தப்பு எதுவென தெரியாமல் பொய், திருட்டு என பணத்தை சேஸ் பண்ணி சிக்கலில் மாட்டிக்கொண்டு முழிக்கும் கேரக்டர் அதிலும் ஆண் பாலியல் தொழிலாளியாக நடிக்க ரொம்பவே துணிச்சல் வேண்டும்.. ஆனால் தைரியமாக ஏற்று நடித்துள்ளார் விக்கி. ஆரம்பத்தில் படத்திலும் நம் மனதிலும் ஓட்ட மறுப்பவர், படம் ஆரம்பித்த இருபதாவது நிமிடத்தில் இருந்து அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார்

படத்தில் கதாநாயகி என்கிற கேரக்டரே இல்லை என்பது புதுசு. ஹீரோவின் நண்பராக படம் முழுதும் இரண்டாவது ஹீரோவாகவே வருகிறார் மிப்பு.. இவரது கதாபாத்திரத்திற்கு, காமெடி பண்ண வாய்ப்பு இருந்தும் இவரால் அதை சரியாக பயன்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.

எந்நேரமும் காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு விக்கி, மிப்புவின் ரூம்மேட்டாக வரும் நம்ம ராகுல் தாத்தா (உதயபானு) செம அட்ராசிட்டி பண்ணுகிறார். அவ்வப்போது சீரியஸ் மூடுக்கு தாவும் படத்தை கலகலப்பாக்கும் வேலை ‘பிச்சைக்காரன்’ புகழ் ஈஸ்வர் மற்றும் அவரது அல்லக்கைகளுக்கு. அதை சரியாகவே செய்திருக்கிறார்கள். குள்ளநரித்தனம் காட்டும் போலீஸ் இன்ஸ்பெக்டராக வினோத்தும், வேறுவழியில்லாமல் பணிந்துபோகும் துறுதுறு சப் இன்ஸ்பெக்டராக வீரராஜனும் கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்கள். ‘மறைந்த ‘ சண்முக சுந்தரம் சில காட்சிகளில் வந்து ஆச்சர்யப்படுத்திவிட்டு போகிறார்.

படத்திற்கு ஓரேயொரு குத்துப்பாட்டு போதும் என்பதை உணர்ந்து பின்னணி இசையில் அதற்கேற்ப ஈடுகொடுத்துள்ளார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின். பெரும்பாலும் இரவு நேராக காட்சிகள் என்கிற சவாலை அழகாக சமாளித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரத்னகுமார்.

தவறான வழியில் சென்றால் எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஒரு மெசேஜாக சொல்ல இந்தப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் சுரேஷ்.ஜி.. திரைக்கதை அமைத்ததிலும் காட்சிகளை படமாக்கிய விதத்திலும் சற்றே அமெச்சூர்த்தனம் தெரிகிறது. சேசிங் காட்சிகளிலும் ஹீரோவை கோட்டை விடும் காட்சிகளிலும் சுந்தர்.சி படங்கள் நினைவுக்கு வந்து போகின்றன.

ஆஹா, ஓஹோ படம் இல்லையென்றாலும் கூட, அதற்கான மோசமான படமும் இல்லை. ஏதேச்சையாக படம் பார்க்க வந்தவர்களுக்கு கூட, ஓரளவு நன்றாகவே பொழுது போனது என்கிற எண்ணத்தை இந்தப்படம் கட்டாயம் ஏற்படுத்தும்.

ஒரே ஒரு காட்சி தவிர்த்து குடிக்கும் காட்சிகளே இல்லாத இந்தப்படத்திற்கு எதற்காக ‘போத என டைட்டில் வைத்தார்கள் என்பது இயக்குனருகே வெளிச்சம்