Search

Boomrang Movie Review

boomerang-movie-review

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூளைச்சாவு அடைந்த அதர்வாவின் முகம் பொருத்தப்படுகிறது. அவரை அழகில்லை என்கிற காரணத்தால் ஒதுக்கிய காதலி மேகா ஆகாஷ், இந்த அழகான முகத்தை பார்த்து தான் ஒதுக்கியவர் எனத் தெரியாமலேயே காதலிக்கிறார்.. இப்படி அதிர்ஷ்டம் ஒரு பக்கம் தேடிவந்தாலும், இன்னொரு பக்கம் யாரோ முகம் தெரியாத சிலர், அதர்வாவை தாக்கி கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.

தான் அதர்வா முகத்தோற்றத்தில் இருப்பதால்தான் தன்னை கொல்ல முயற்சி நடக்கிறது என்பதை உணர்ந்த அதர்வா, இறந்துபோன உண்மையான அதர்வாவின் பின்னணியை ஆராய்கிறார். அப்போதுதான் அவர் நதிநீர் இணைப்பிற்காக போராடிய சமூகப் போராளி என்பதும் எதிரிகளால் அவர் கொல்லப்பட்டதும் தெரியவருகிறது. அவர் விட்டுச் சென்ற போராட்டத்தை இவர் தொடர்ந்தாரா இல்லையா என்பது மீதிக்கதை.

படம் துவங்கியதுமே எந்த குழப்பமும் வரக்கூடாது என்பதற்காக முகமாற்று அறுவை சிகிச்சை பற்றிய டீடெய்லான விளக்கத்துடன் கதைக்குள் நம்மை அழைத்துச் செல்வதால், மொத்த படம் முழுவதையும் குழப்பமின்றி பார்க்க முடிகிறது. அதர்வா இரண்டு விதமான தோற்றங்களில் நடித்த்திருந்தாலும் சமூகப் போராளியாக வரும் அதர்வா நம்மை ரொம்பவே கவர்கிறார்.

கதாநாயகிகள் மேகா ஆகாஷ், இந்துஜா என இரண்டு பேர் இருந்தாலும் சிந்துஜாவிற்கு நடிப்பதற்கு கொஞ்சம் அதிக வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதை அவர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். மேகா ஆகாஷ் கியூட் பார்பி கேர்ள் ஆக நம்மை கவர்கிறார்.

கதாநாயகனுக்கு பக்கபலமாக வீரியமான சமூக கருத்துக்களை நகைச்சுவை நையாண்டி கலந்து கூறும் அதிரடி கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார். அதர்வாவின் இன்னொரு நண்பராக வரும் சதீஷ் காமெடியில் ரொம்பவே வறட்சி. சமூக ஆர்வலராக வரும் சுகாசினி, வில்லனாக நடித்துள்ள உபென் படேல், கவுன்சிலராக வரும் ரவிமரியா ஆகியோரும் தங்களது சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களின் அவல நிலையை அப்படியே கேமராவில் அள்ளி வந்திருக்கிறது பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவு. இரண்டாம் பாதியில் படத்திற்கு விறுவிறுப்பு கூட்டுகிறது ரதனின் பின்னணி இசை.. தேசமே பாடலும் படமாக்கப்பட்ட விதமும் வீரியம்.

இன்றைக்கு நம் நாட்டிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு அத்தியாவசியமான தேவையாக விளங்கும் நதிநீர் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக படம் இயக்கியதற்காகவே இயக்குனர் கண்ணனுக்கு முதலில் பாராட்டு தெரிவித்தாக வேண்டும்.

நிஜத்தில் நதிநீர் இணைப்பு என இறங்கினால் என்னென்னவெல்லாம் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் கோர்வையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.. அதேபோல முகமாற்று சிகிச்சை என்கிற புதிய விஷயத்தையும் இதற்குள் அழகாக நுழைத்திருக்கிறார்.. சில காட்சிகள் இதற்கு முன்பு முன்பு வந்த ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை ஞாபகப்படுத்தினாலும் இயக்குனர் கண்ணனின் சமூக நோக்கிலான பார்வையில் அவையெல்லாம் ஒரு குறையாகவே தெரியவில்லை.

இளைஞர்கள் சக்தியை விவசாயத்தின் பக்கம் திருப்புவதற்கும் அவர்களை ஒருங்கிணைப்பதற்கும் இது போன்ற ஆக்கப்பூர்வமான படங்கள் நிறைய வரவேண்டும் என்பதே நமது விருப்பம்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *