Search

Bongu Movie Review

bongu-review

கார் கடத்தலை பின்னணியாக வைத்து ஒரு ஹைடெக்கான படமாக உருவாகியுள்ளது இந்த ‘போங்கு’..

கார் கம்பெனி ஒன்றில் வேலைபார்க்கும் நட்டி அவரது தோழி ருஹி சிங், நண்பன் அர்ஜூன் ஆகியோர் அவர்கள் பொறுப்பில் இருந்த ஒரு கார் திருடு போனதால் சூழ்நிலை காரணமாக ஜெயிலுக்கு போகிறார்கள்.. வெளியில் வந்தாலும் அவர்கள் பிளாக் லிஸ்ட்டில் இடம்பெற்றதால் வேலை கிடைக்க மறுக்கிறது.

நண்பன் பாபுவின் உதவியுடன் கார் கடத்தல் தொழில் செய்யும் நந்தகுமார் அறிமுகமாக, பணத்திற்காக கார் கடத்தும் தொழிலை ஆரம்பிக்கிறார்கள் நட்டியம் நண்பர்களும்.. அடுத்ததாக கார் பிரியரான மதுரை ரவுடி பாண்டியனிடம் இருக்கும் பத்து விலையுயர்ந்த கார்களை கடத்த சொல்கிறார் நந்தகுமார்.

ஹைடெக்காக திட்டம் தீட்டி கார்களை லவட்டுகிறார் நட்டி.. அப்போதுதான் தங்களை திருட்டு பழிக்கு ஆளாக்கியவரே அந்த பாண்டியன் தான் என்றும் தங்கள் கம்பெனியிலிருந்து திருடப்பட்ட கார் அங்கே இருப்பதையும் அறிகிறார் நட்டி.. பாண்டியனின் தகிடுதத்தங்கள் அடங்கிய டாக்குமெண்டுகள் நட்டியின் கைவசம் வர, பாண்டியனிடம் கோடிகளில் பேரம் பேசும் நட்டி, அந்த காரையும் அவரிடம் இருந்து தூக்குவதாக சவால்விடுகிறார்..

சொன்னபடி நட்டி அந்த காரை தூக்கினாரா..? கோடிகளை அள்ளினாரா..? வில்லனுக்கு தனக்குமான பழியை தீர்த்துக்கொன்டாரா என்பதை கடைசி இருபது நிமிடங்களில் பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

நட்டி என்கிற நடராசன் சுப்ரமணியத்தின் ஸ்டைலான ஸ்பீடான வசனமும் நடிப்பும் கைகொடுக்க படம் போரடிக்காமல் செல்கிறது.. வசனங்கள் கைதட்டலை அள்ளுகின்றன. கார்களை நவீன தொழில்நுட்பத்துடன் நட்டி கடத்தும் விதம் பிரமிப்பூட்டுகிறது.. கதாநாயகி ருஹி சிங் வட இந்திய வரவு என்றாலும் கேரக்டருக்கேற்ற பொருத்தமான தேர்வு.. நிகிதாவின் குத்தாட்டமும் கூட ரசிகர்களை குஷிப்படுத்துகிறது.

தானாகவே வந்து நட்டி அன் கோவிடம் மாட்டிக்கொள்ளும் முநீஷ்காந்த் மற்றும் அர்ஜூன் ஆகியோர் கலகலப்புக்கு உத்திரவாதம் தருகிறார்கள். தாதா பாண்டியனாக வரும் வில்லன் சரத் லோஹித்ஸ்வா மதுரை ரவுடிக்கு பொறுத்தம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். இடைவேளைக்குப்பின் வரும் போலீஸ் அதிகாரியாக அதுல் குல்கர்னியும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

பாவா லட்சுமணனுக்கு இதில் முக்கியமான கேரக்டர் காமெடியில் வெளுத்து வாங்குகிறார். கார்வாங்க வந்து ஏமாறும் மயில்சாமியும் கலகலப்பூட்டுகிறார்.. கார் டெக்னாலஜியை விரல் நுனியில் வைத்திருக்கும் சாம்ஸ், காரை தூக்கவிடாமல் செக்யூரிட்டி பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் காட்சிகள் செம கலாட்டா. அதிலும் வில்லனின் சவாலை ஏற்று சாம்பிளுக்கு அவரே வில்லனின் காரை திருடி காட்டுவது செம கெத்து.

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் படத்தின் விறுவிறுப்பை கூடவே செய்கின்றன. கார் கடத்தலை மையமாக வைத்து, அதில் ஒரு பழிவாங்கல் கதையையும் இடையில் செருகி ரசிகர்களுக்கு போரடிக்காத வகையில் அக்மார்க் கமர்ஷியல் படமாக இதை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் தாஜ். லாஜிக்கான சில கேள்விகள் ஆங்காங்கே எழுந்தாலும் அதை விறுவிறுப்பான திரைக்கதையால் சரிசெய்திருக்கிறார் இயக்குனர் தாஜ்..

போங்கு படத்திற்கு எதிர்பார்ப்புடன் வருபவர்கள் நிச்சயம் ஏமாறமாட்டார்கள்.. அதற்கு கியாரண்டி கொடுத்துள்ளார் இயக்குனர் ராஜ்.