Search

Bhaskar Oru Rascal Movie Review

Bhaskar Oru Rascal Movie

வெளிநாடு சென்று சம்பாதித்து இப்போது கோடீஸ்வரராக இருப்பவர் அரவிந்த்சாமி.. அவரது மனைவி இறந்துவிட, மகனுடனும் தந்தை நாசருடனும் வசிக்கிறார். கணவன் இறந்துவிடவே, பெண் குழந்தை பேபி நைனிகாவுடன் தனித்து வாழ்பவர் அமலாபால். அரவிந்த்சாமியின் மகன் மாஸ்டர் ராகவனும், அமலாபாலின் மகள் நைனிகாவும் பள்ளியில் திக் பிரண்ட்ஸ்.. இருவரும் சேர்ந்து தங்களது தாய்க்கும் தந்தைக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள்..

மகனின் தாய்ப்பாச ஏக்கத்தை தீர்ப்பதற்காக அரவிந்த்சாமி சம்மதித்தாலும், அமலாபாலுக்கு இந்த கல்யாணத்திலும் விருப்பம் இல்லை. அரவிந்தசாமியையும் அவ்வளவாக பிடிக்கவில்லை. அரவிந்த்சமியின் தந்தை நாசர் அமலாபாலிடம் பேசி ஒருவழியாக அவரை சம்மதிக்க வைக்கும் நேரத்தில், இறந்துபோனதாக நினைத்த அவரது கணவன் அப்தாப் ஷிவ்தாசனி உயிருடன் வந்து நிற்கிறார்.

இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் திருமணத்தை நிறுத்துகிறார் அமலாபால்.. ஆனால் கணவன் வந்துவிட்டதால் சந்தோஷத்திற்கு பதிலாக பயப்படுகிறார் அமலாபால்.. பயப்படும் அளவுக்கு அவரது கணவரின் பின்னணி என்ன..? அமலாபால் இறுதியில் என்ன முடிவெடுத்தார் என்பது தான் க்ளைமாக்ஸ்..

முதலில் அடி… அப்புறம் தான் பேச்சு என்கிற பாலிஸி கொண்ட அதிரடி ‘ராஸ்கல்’ அரவிந்த்சாமி. அலட்டல் இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து பண்ணுவதும்,. மகனின் ஆசைக்காக அமலாபாலை மணம் முடிக்க சம்மதிப்பதும் என பெரும்பாலும் கெத்து காட்டுகிறார். ஆனாலும் அவரது முகத்திற்கு இந்த கேரக்டர் கொஞ்சம் அந்நியப்பட்டே தெரிகிறது.

வேட்டியை விலக்கி அண்டர்வேர் பாக்கெட்டில் இருந்து அரவிந்த்சாமி பணம் எடுப்பது, பையனின் பங்ஷனுக்கு நேரமாகிவிட்டதால் காஸ்ட்லி காரைவிட்டுவிட்டு ஆம்புலன்சில் போவது என கலாட்டாக்களுக்கும் பஞ்சமில்லை. கூடவே சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா என அவரது அடிப்பொடிகளும் சேர்ந்துகொள்ள ஓரளவு படம் கலகலப்பாக நகர்கிறது என்றாலும் சித்திக் படங்களுக்கே உண்டான ட்ரேட் மார்க் காமெடி இதில் மிஸ்ஸிங்.

அரவிந்த்சாமி மீது கொஞ்சம் ஈர்ப்பு இருந்தாலும் சூழல் காரணமாக விறைப்பு காட்டும் கேரக்டரில் அமலாபால் செட்டாகிறார். இடைவேளைக்குப்பின் இருதலைக்கொள்ளி எறும்பாக மாறி தவிக்கும் காட்சிகளிலும் ஸ்கோர் பண்ணுகிறார். ஆனால் ஒரிஜினலில் நயன்தாராவிடம் இருந்த ஈர்ப்பு இவரிடம் மிஸ்சிங்.

படத்தின் முக்கிய ஜீவன் அந்த இரண்டு குட்டீஸ்கள் தான். பெண்பிள்ளை மாதிரி பயந்து ஒதுங்கும் சிறுவன் ராகவனும், ஆண்பிள்ளை மாதிரி வீரமான சிறுமியான நைனிகாவும் சரியான தேர்வு. இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து பெரிய மனிதர்கள் ரேஞ்சுக்கு திட்டம் போடும்போது நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.

நிதானம் காட்டும் அழகு வில்லனாக அப்தாப் ஷிவ்தாசனி வில்லத்தனத்தில் ஜென்டில்மேனாக அசத்துகிறார்.. வழக்கமாக சித்திக்கின் படங்கள் உணர்வுப்பூர்வமாகவும், அதே நேரம் பல திருப்பங்களுடனும் இருக்கும். இதில் அந்த மாயஜாலங்கள் இல்லை. இன்னும் கொஞ்ச நேரம் இந்தப்படம் நீளாதா என எப்போதும் ரசிகர்களை நினைக்க வைக்கும் சித்திக், இந்தமுறை அப்படிப்பட்ட உணர்வை முழுமையாக கொடுக்கவில்லை என்றாலும் குடும்பத்துடன் பார்க்க ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை கொடுத்துள்ளார் என்பது மறுக்கமுடியாத உண்மை.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *