Search

Ayogya Movie Review

இன்று பாலியல் வன்முறை குற்றங்களில் ஈடுபடும் கயவர்கள் கைது செய்யப்பட்டாலும் மறுநாளே ஹாயாக சிரித்துக்கொண்டு ஜாமீனில் வெளி வருகின்றனர் ஆனால் தண்டனை கடுமையாக்கப்பட்டால்தான் குற்றம் நடக்காமல் தடுக்க முடியும் என்பதை வலியுறுத்தி ஒரு அயோக்கிய குணம் கொண்ட போலீஸ் இளைஞன் கையில் எடுக்கும் போராட்டம் தான் இந்தப் படம்.

ayogya

சிறுவயது முதலே பணம் தான் பிரதானம் என்றும் ரவுடியை விட போலீஸ்காரர் தான் வலிமையானவர் என்கிற கண்ணோட்டத்திலும் வளர்கிறார் அனாதை சிறுவனான விஷால். எப்படியோ அடித்து பிடித்து படித்து போலீஸ் அதிகாரி வேலைக்கு சேருகிறார். குற்றங்களை கண்டு கொள்ளாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் செய்யாமல் பணம் ஒன்றே குறிக்கோளாக செயல்படும் விஷாலிடம் அவரது காதலி ராஷி கண்ணா தனது பிறந்தநாளுக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை கேட்கிறார் இந்த பரிசை கொண்டுவருவதற்காக கிளம்பும் விஷால் பரிசுடன் சேர்த்து வில்லங்கத்தையும் விலைக்கு வாங்கி வருகிறார்

எதிரிகளிடம் சிக்கி பாலியல் வன்முறைக்கு ஆளாகி மரணமடைந்த ஒரு பெண்ணின் வழக்கை கையில் எடுக்கும் விஷால், தான் அதுவரை பணத்திற்காக வேலை செய்து வந்த ரவுடி பார்த்திபனையே எதிர்த்து அவனது தம்பிகள் நால்வரை சிறையில் தள்ளி கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார். முக்கியமான ஆதாரம் எதிரிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட இந்த நால்வரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பாமல் இருப்பதற்காக விஷால் ஒரு அதிரடி முடிவு எடுக்கிறார் அது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.

தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதாலோ என்னமோ படம் முழுவதும் தெலுங்கு படம் அடுத்த ஒரு உணர்வையே தருகிறது. அதற்கேற்றாற்போல் விஷாலின் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் ஏகப்பட்ட மாறுதல். இடைவேளை வரை தன் செயல்பாடுகளால் படத்தில் வரும் நல்லவர்களை மட்டுமல்ல, படம் பார்க்கும் நம்மையும் செம கடுப்பாக்கினாலும் படத்தின் இறுதியில் வரும் 20 நிமிட காட்சிகளில் அப்பாடா என நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து கடைசியில் கைதட்ட வைத்து வெளியே அனுப்புகிறார் விஷால்.

விஷாலின் மனமாற்றத்திற்கு காரணமாக அமைந்து அவரை நல்வழிக்குத் திருப்பும் காதலி கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா ஓகே. வில்லனாகவும் நடிக்க வேண்டும் அதே சமயம் கொஞ்சம் டீசன்ட்டாகவும் இருக்கவேண்டும் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் பார்த்திபன்தான் போல. இந்த படத்திலும் அதையே செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க போராடும் பூஜா தேவரியா, கிளைமாக்ஸில் மட்டுமே வந்தாலும் அருமையான தீர்ப்பு வழங்கி அசத்தும் ராதாரவி, குணச்சித்திர கதாபாத்திரத்தில் வெளியிடும் எம்.எஸ்.பாஸ்கர், இவர்களுடன் படம் முழுதும் நேர்மையையே காக்கி சட்டையாக அணிந்து விஷாலின் அடாவடி போக்கிற்கு ஈடுகொடுத்து நடித்திருக்கும் கே.எஸ்.ரவிகுமாரும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.

கிளைமாக்ஸில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதற்காக விஷால் எடுக்கும் அதிரடி முடிவு யாருமே எதிர்பாராத ஒன்று அதுவரையிலான அந்த கேரக்டரின் மீதான கோபத்தை அப்படியே இது தனித்து விடுகிறது.. படத்தை தாங்கிப்பிடிக்கும் தூணே அதுதான்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை ஒன்றே சரியான தண்டனை என்பதை வலியுறுத்தி உள்ளதற்காக படத்தின் மற்ற குறைகளை மறந்து இயக்குனர் வெங்கட் மோகனை தாராளமாக பாராட்டலாம்