Search

பாரம் விமர்சனம்

65 வயது மதிக்கத்தக்க கருப்பசாமி, தனது தங்கையின் வீட்டில் இருந்து செக்யூரிட்டி வேலைக்கு சென்று வரும் ஒரு என்ர்ஜிட்டிக்கான எளிமையான மனிதர்.

ஒருநாள், வேலை சென்று திரும்பும்போது, விபத்தில் சிக்கி இடுப்பு எலும்பு உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

கருப்பசாமியின் தங்கை மகன்கள், அவரை பாசத்தோடு கவனித்துக் கொள்ள, கருப்பசாமியின் மகன் செந்திலோ வேண்டா வெறுப்பாக கருப்பசாமியை பார்க்கிறார்.

மருத்துவமனையில், கருப்பசாமிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூற, அதெல்லாம் வேண்டாம் நிறைய செலவாகும் என்று கூறி தனது வீட்டின் பின்புறத்தில் ஒரு கீற்று கூடத்தில் கருப்பசாமியை படுக்க வைத்து விடுகிறார் மகன் செந்தில்.

படுத்த படுக்கையாக இருக்கும் கருப்பசாமியை, விஷ ஊசி போட்டு தலைக்கூத்தல் என்ற முறையில் கருப்பசாமியை கொலை செய்கிறார் செந்தில்… அதன் பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை..

’தலைக்கூத்தல்’ முறை என்றால் என்ன..???

முன் காலத்தில், மிகவும் வயது முதிர்ந்த தன்னால் எழுந்து கூட நடக்க முடியாமல் இயற்கை உபாதைகளுக்கு கூட செல்ல முடியாமல் இருக்கும் முதியவர்களை கருணை கொலை செய்யும் முறைக்கு பெயர் தான் ‘தலைக்கூத்தல்’ முறை.

பல விதமாக இப்படியான முறையில் முதியவர்களை ‘கொலை’ செய்யும் தலைக்கூத்தல் முறை பல நாடுகளில் இருந்து வருகிறது.

இந்த தலைக்கூத்தல் முறையை முறையாக சொல்லாமல், மகனால் தந்தை கொலை செய்யப்படும் கொடூர செயலை மட்டுமே காட்டி, தலைக்கூத்தல் முறை இதுதான் என்று காட்டப்பட்டு ‘பாரம்’ மிகப்பெரும் பாரமாகியிருக்கிறது.

இப்படம் எப்படி இவ்வளவு விருதுகளை குவித்தது என்ற கேள்வி நிறையவே மனதுக்குள் வந்து செல்லத்தான் செய்கிறது.

தலைக்கூத்தல் முன்னொரு காலத்தில் இருந்த ஒரு நடைமுறை. அந்த நடைமுறை தற்போது எங்கும் இல்லை.

இப்படியொரு செயல் அந்த காலத்தில் இருந்தது என்று சொல்லியிருக்கலாமே தவிர, அதை இன்னும் நடைமுறையில் இருக்கிறது என்று சொல்லியிருப்பதும் கொலை செய்யும் தோணியில் காட்டியிருப்பதும், ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது.

எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாமல் ஒரு கிராமமே அமைதி காப்பது என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாக தான் இருக்கிறது.

நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

அந்த கதாபாத்திரங்களுக்கு மட்டுமே இந்த மதிப்பெண்களை கொடுக்க வேண்டியுள்ளது.

பாரம் – தமிழகம் தவிர்க்கப்பட வேண்டிய சினிமா..