Search

கூர்கா ; விமர்சனம்

gurkha-move-reviewபோலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் யோகிபாபுவுக்கு அவரது உடல்வாகு கைகொடுக்கவில்லை.. அதற்கு பதிலாக தனது தாத்தாவின் பூர்வீக வேலையான கூர்க்கா வேலை கிடைக்கிறது. மிகப் பெரிய மால் ஒன்றில் சார்லியுடன் சேர்ந்து செக்யூரிட்டி பணியில் ஈடுபடுகிறார் யோகிபாபு.

அங்கே முன்னாள் ராணுவ வீரரான ராஜ்பரத், ராணுவ வீரர்களை யாரும் மதிப்பதில்லை என்கிற கோபத்தில் அரசுக்கு பாடம் புகட்டி, அதன்மூலம் பணம் பறிக்க நினைத்து அந்த மாலை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது அங்கு உள்ள தியேட்டரில் இருப்பவர்களை பிணைக்கைதிகளாக வைத்து மிரட்டுகிறார்.

அதில் குறிப்பாக அனைவருமே போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர் என்பதால் அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்.. இந்த நேரத்தில் வேடிகும்ண்டு நிபுணராக என்ட்ரி கொடுக்கும் மாலுக்கு உள்ளேயே இருக்கும் யோகிபாபுவும் சேர்ந்து உள்ளே இருக்கும் கடத்தல்காரர்களை எப்படி எதிர்கொண்டு பிணைக்கைதிகளை விடுவிக்கிறார்கள் என்பதுதான் மீதிக்கதை.

பகடை உருட்டும் விளையாட்டில் எல்லா கட்டத்திலும் பணம் கட்டினால் எப்படியோ ஒரு கட்டத்தின் மூலம் போட்ட காசு கைக்கு கிடைத்து விடும்.. அதுபோல யோகிபாபு மொத்த படத்திலும் கதையின் நாயகனாக நடிக்கும்போது பாதி காமெடி ஒர்க்கவுட் ஆகாவிட்டாலும் பாதிக்குமேல் படம் கலகலவென செல்லும் என்பதற்கு இந்தப் படத்திலும் உத்தரவாதம் தருகிறார் கூர்கா வரும் யோகிபாபு.

அவர் கூர்காவாக மாறுவதற்கான காரணம் கனகச்சிதம். ஆரம்பத்தில் சற்றே சாதாரணமாக நகரும் கதை மாலுக்குள் கடத்தல்காரர்கள் புகுந்து கொண்டபின் யோகிபாபுவின் காமெடியால் களைகட்டுகிறது.. குறிப்பாக நடப்பு அரசியல் நிகழ்வுகள் மற்றும் பிரபல ஹீரோக்களின் முக்கியமான மேனரிசங்கள், பட காட்சிகள் என அனைத்தையும் போகிற போக்கில் இமிடேட் பண்ணி அதிரவைக்கிறார் யோகிபாபு. அதிலும் சிறுவனை காப்பாற்றுவதற்காக மாடியிலிருந்து அவர் குதிக்கும் காட்சி பிரபல ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் இருக்கிறது.

கதாநாயகியாக எலிசா பாத்திரமறிந்து நடித்திருக்கிறார். இடைவேளைக்கு பின்பு என்ட்ரி கொடுத்தாலும் ஆனந்தராஜ் வரும் காட்சிகள் செம கலாட்டா. சார்லியும் தன் பங்கிற்கு கொடுத்த பொறுப்பை சரியாக செய்துள்ளார்.. கத்தி கத்தி பேசுவதுதான் ரவி மரியாவின் கேரக்டர் என்றாலும் நமக்கு எரிச்சலூட்டவே செய்கிறார் மனிதர்.. மயில்சாமி. நமோ நாராயணன் ஆகியோரை வைத்து யார் யாருக்கு டோஸ் கொடுக்க வேண்டுமோ அவர்களை செமத்தியாக கலாய்த்திருக்கிறார்கள்.. அண்டர்டேக்கர் என்கிற அந்த நாய் குழந்தைகளை குஷிப்படுத்தும் விதமாக சேட்டைகள் செய்கிறது.

கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு மால் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பிரமிப்பூட்டுகிறது.. ராஜ் ஆரியனின் பின்னணி இசை காட்சிகளை வேகத்தைக் கூட்டுகிறது. சாம் ஆண்டனின் படங்களில் லாஜிக் எல்லாம் பார்க்க தேவையில்லை.. ரசிகர்களை சந்தோஷப்படுத்துவது ஒன்றையே குறிக்கோளாக வைத்து படம் இயக்கும் அவர் இந்த கூர்கா படம் மூலம் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை கலகலவென சிரிக்க வைத்து அனுப்பி வைக்கிறார் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *