Search

Womens Protest Before at STR Home Again

str

நடிகர் சிம்புவின் ஆபாச பாடலுக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னை, கோவை, சேலம், திருத்துறைபூண்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் சிம்பு மீதும் அந்த பாடலுக்கு இசையமைத்ததாக கூறப்படும் அனிருத் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருவருக்கும் எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மாம்பலம் மாசிலாமணி ரோட்டில் உள்ள சிம்பு வின் வீட்டு முன்பு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றன. பெண்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சிம்பு வீட்டு முன்பு இன்று மீண்டும் போராட்டம் நடந்தது. பெண்கள் விடுதலை முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான பெண்கள் காலை 11 மணியளவில் சிம்பு வீட்டுக்கு திரண்டு சென்றனர். அவர்களை மாம்பலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் தெரு முனையிலேயே தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கு நின்றபடியே சிம்பு, அனிருத் ஆகியோருக்கு எதிராக கோஷமிட்டனர். இருவரது படங்களுக்கும் செருப்பு மாலை அணிவித்தனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த சாணத்தையும் எடுத்து படங்களின் மேல் பூசினர்.

சுமார் 1 மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சு நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே கோவையில் மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சிம்பு, அனிருத் மீது 3 பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக இருவரும் 19–ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பினர்.

இந்தநிலையில், சிம்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு அளித்தனர். அதில், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையை வருகிற 5–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்று போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி சுப்பையா உத்தரவிட்டார்.

சிம்பு நாளை (19–ந்தேதி) போலீஸ் நிலையத்தில் ஆஜராக வாய்ப்பில்லை என தெரிகிறது. போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தர விட்டிருப்பதால் வழக்கு தொடர்பாக ஆவணங்களுடன் கோவை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

மாதர் சங்கத்தினரின் புகார் மற்றும் அவர்கள் அளித்த சி.டி.க்கள் முதல் தகவல் அறிக்கை நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்னை விரைந்துள்ள போலீசார் அவற்றை அரசு வக்கீலிடம் காட்டி பதில் மனுவை தயாரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *