‘நான்’ படம் மூலம் இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று அதிக வசூலையும் வாங்கிக் கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி ‘சலீம்’ படத்தில் நடித்தார். இதில் இவருக்கு ஜோடியாக அக்ஷா நடித்திருந்தார்.
இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்திருந்தார். என்.வி.நிர்மல் குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது சலீம் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் சலீம் படத்தை பார்த்து தெலுங்கில் இப்படத்தை ரீமேக் செய்யுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் அவரே நடிக்கவும் சம்மதித்துள்ளார்.
இதனால் இயக்குனர் நிர்மல் குமார் சலீம் படத்தை டப் செய்யும் திட்டத்தை மாற்றிவிட்டு ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை.