Search

Vengayam Director New Attempt

Vengayam Director New Attempt

வெங்காயம் இயக்குனரின் புதுமையான முயற்சி.

வெங்காயம் படத்தின் மூலம் வித்தியாசமான படத்தை இயக்கியிருப்பதாக பாராட்டப்பட்ட சங்ககிரி ராஜ்குமார் தனது அடுத்த படத்திற்காக முற்றிலும் புதுமையான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.உலக சினிமாவிலே இதுவரை யாரும் இத்தகைய முயற்சியில் ஈடுப்பட்டதில்லை என்றும் அவர் நம்பிக்கையோடு கூறுகிறார்.

‘ஒன்’ என்னும் பெயரிலான அந்த படத்தை முழுக்க முழுக்க அவர் மட்டுமே உருவாக்கியிருக்கிறார்.ஆம் அவர் ஒருவரே இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்.உதவியாளர் என்று கூட வேறு இருவரை நாடாமல் மற்ற துறைகளுக்கும் வேறு யாரையும் பணிக்கு வைத்து கொள்ளாமல் இயக்கம் முதல் நடிப்பு வரை எடிட்டிங் முதல் டப்பிங் வரை அனைத்து துறைகளையும் அவரே கையாண்டிருக்கிறார்.

இந்த படத்தை பொறுத்தவரை இயக்குனரும் அவரே நடிகரும் அவரே ஆபிஸ் பாயும் அவரே!காட்சிகளுக்காக லொகேஷன் பார்த்ததும் அவரே.கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உத்திகளை கையாண்டதும் அவரே.

இப்படி நம்பமுடியாமல் ஒரு திரைப்டத்திற்கான எல்லா வேலைகளை அவர் ஒருவரே மேற்கொண்டிருக்கிறார்.

படத்தில் 300க்கும் மேற்ப்ட்ட கதாபாத்திரங்கள் இருக்கின்றன என்று சொல்லும் ராஜ்குமார் அனைத்து பாத்திரங்களிலும் கிராபிக்ஸ் உதவியோடு தானே தோன்றுவதாக கூறுகிறார்.குறிப்பிட்ட ஒரு காட்சியில் மட்டும் தியேட்டரில் 500 பேருக்கு மேல் படம் பார்ப்பதாக அமைத்திருப்பதாக அவர் கூறுகிறார்.

திரைப்படத்துறையில் கவனம் பெற வேண்டும் என்றால் ஒன்று பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்க வேண்டும் அல்லது வித்தியாசமான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கூறும் ராஜ்குமார் தான் வித்தியாசமான வழியை தேர்வு செய்து ,தனி மனிதனாக ஒரு படத்தை உருவாக்கி காட்ட தீர்மானித்தாக கூறுகிறார்.இதற்காக 2003 முதல் திரைப்படத்துறையின் அனைத்து பிரிவுகளிலும் பயிற்சி மேற்கொண்டு வந்ததாக கூறுபவர் இதற்கு 5 ஆண்டுகள் போதுமானது என நினைத்ததற்கு மாறாக 9 ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறுகிறார்.

ஒருவராலேயே ஒரு படத்தை எடுத்து விட முடியுமா?இந்த கேள்விக்கு பதில் அளிப்பதற்காகவே தான் படம் எடுத்ததை காமிராவில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.

இந்த அனுபவம் சவாலானதாக இருந்தது ஆனால் நேசித்து செய்தேன் என்கிறார்.

ஆங்கிலத்தில் உருவாகும் இந்த படம் இப்போதே ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் இந்த படத்தின் முன்னோட்டத்தை அமெரிக்காவில் திரையிட அழைத்திருப்பதாக ராஜ்குமார் உற்சாகமாக கூறுகிறார்.

படத்தின் 80 சத‌வீத பணிகள் முடிந்து விட்டன‌.விரைவில் எல்லா வேலைகளும் முடிந்து சர்வதேச அளவில் ஒன் திரைப்படம் வெளியாக உள்ளது.