‘ருத்ரமாதேவி’ படப்பிடிப்பில் அனுஷ்கா அணிந்து நடித்த நகைகள் திடீரென மாயமானது. மர்ம நபர்கள் அவற்றை திருடிச் சென்று விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ருத்ரமாதேவி சரித்திர கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதில் அனுஷ்கா ராணி வேடத்தில் நடிக்கிறார்.
அவர் அணிந்து நடிப்பதற்காக பல கோடி செலவில் தங்க, வைர நகைகள் வாங்கப்பட்டது. தலையில் அணியும் கிரீடம், கழுத்து மாலைகள், ஒட்டியானம் போன்றவை தங்கத்தால் பிரத்யேகமாக செய்யப்பட்டது. அனுஷ்காவிடம் அளவெடுத்து பொற்கொல்லர்கள் இவற்றை தயார் செய்தனர்.
ஐதராபாத்தில் அரண்மனை அரங்கு அமைத்து அதற்குள் நடந்த படப்பிடிப்பில் அனுஷ்கா இந்த நகைகளை அணிந்து நடித்தார். ஒவ்வொரு காட்சியிலும் அவர் நடித்து முடித்ததும் நகைகளை உதவி இயக்குனர்களிடம் கழற்றி கொடுத்து விடுவார். அவை பெட்டிக்குள் வைத்து பூட்டி ஒரு அறைக்குள் பத்திரமாக வைக்கப்பட்டன.
இப்படி வைக்கப்பட்ட நகைபெட்டிகளைத்தான் காணவில்லை. இதனால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியானார்கள்.
தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. திருட்டு போன நகைகள் கிடைத்தால்தான் அனுஷ்கா மீண்டும் ராணி வேடத்தில் நடிக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.
நகைகள் திருட்டு போனது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் படப்பிடிப்பு குழுவை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
இந்த நிலையில் திருட்டு போன நகை பெட்டிகள் சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஐதராபாத் போலீசார் சென்னை வந்துள்ளனர். இன்று நகைகள் மீட்கப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.