ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பது போன்று பாலிவுட் நடிகர் ஆமீர்கானின் உருவப்படத்துடன் கூடிய பிரசார போஸ்டர்களை ஆம் ஆத்மி கட்சியின் சில வேட்பாளர்கள் பயன்படுத்தியதாக சமூக வலைத்தளமான டுவி்ட்டரில் செய்திகள் வெளியானது.
இந்த செய்தி ஆமீர்கானின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஆமீர்கான் கடிதம் எழுதியுள்ளார்.
எந்த குறிப்பிட்ட அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை எனவும், தான் எந்தவொரு கட்சிக்காகவும் பிரசாரம் செய்யவில்லை என்றும், இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில், அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வேட்பாளர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர்களில் ஆமிர்கானின் படங்களை தவிர, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மற்றும் நடிகர் மோகன்லால் ஆகியோரது படங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவை ஆம் ஆத்மி கட்சியால் வெளியிடப்பட்டதா? அல்லது போலியானவையா? என்பது பற்றி உறுதிபடுத்த முடியவில்லை.