Search

Producer Council Warns Saranya Mohan and Kajal Agarwal

saranyamohan-kajalagarwal

சினிமா படங்களின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் அப்படங்கள விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் அதில் நடித்த நடிகைகள் தவறாது பங்கேற்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் வற்புறுத்தி உள்ளது. இவ்விழாக்களுக்கு வராத நடிகைகள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்றும் வற்புறுத்தி எச்சரித்து இருந்தது. ஆனாலும் இதனை நடிகைகள் காஜல் அகர்வால், சரண்யா மோகன் இருவரும் பொருட்படுத்தவில்லை.

காஜல்அகர்வால் ஆல் இன் ஆல் அழகுராஜா படவிழாவுக்கும், சரண்யாமோகன் கோலாகலம் படவிழாவுக்கும் வராமல் புறக்கணித்து விட்டனர். இருவரையும் சென்னையில் நடந்த கோலாகலம் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் கண்டித்தனர்.

டைரக்டர் சங்க தலைவர் விக்ரமன் பேசும்போது, கோலாகலம் படத்தில் கதாநாயகியாக சரண்யா மோகன் நடித்துள்ளார். இந்த விழாவுக்கு தயாரிப்பாளர் அவரை அழைத்த போது வர முடியாது என மறுத்துள்ளார். நடிப்பதுதான் என் வேலை படத்தை விளம்பரம் செய்வது என் பணி அல்ல என்று சொல்லி உதாசீனப்படுத்தி உள்ளார். இப்படி ஒத்துழைப்பு தராத நடிகைகளுக்கு நாம் எப்படி ஒத்துழைப்பு தரமுடியும் என்றார்.

கார்த்தி, காஜல் அகர்வால் நடிக்கும் ஆல் இன் ஆல் அழகு ராஜா படதயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்க செயலாளருமான ஞானவேல் ராஜா விழாவில் பேசும்போது ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் பாடல் சி.டி.வெளியீட்டு விழாவுக்கு வராமல் புறக்கணித்த காஜல் அகர்வாலை கண்டித்தார். அவர் பேசியதாவது:–

படவிழாக்களுக்கு நடிகைகள் கண்டிப்பாக வரவேண்டும். நான் தயாரித்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அதில் நடித்த கதாநாயகியை அழைத்தோம். அவர் வரவில்லை. அந்த நடிகையின் மானேஜர் விழாவுக்கு வரவிடாமல் தடுத்து விட்டாராம். மானேஜர் அனுமதிக்காததால் நடிகை வரவில்லை. படங்களின் ரிலீசுக்கு விளம்பரங்கள் முக்கியம். இது போன்ற விழாக்களில் நடிகைகள் பங்கேற்றால்தான் படம் மக்களை சென்று அடையும்.

இது நம் படம். ரசிகர்களிடம் கொண்டு போகும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்ற உணர்வு நடிகைகளுக்கு வரவேண்டும். இவ்வாறு ஞானவேல் ராஜா பேசினார்.

தயாரிப்பாளர் சங்க பொருளாளர் ராதாகிருஷ்ணன் பேசும்போது படவிழாக்களில் பங்கேற்காத நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இறுதியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பேசும்போது பட விழாக்களுக்கு நடிகைகள் வராதது பற்றி இங்கே குறைபட்டார்கள். சொந்த குரலில் டப்பிங் பேசாத நடிகைகள் படப்பிடிப்பு முடிந்ததுமே முழு சம்பளத்தையும் வாங்கிவிட்டு போய்விடுகின்றனர்.

படங்களை விளம்பரபடுத்தும் பொறுப்பு நடிகைகளுக்கு இருக்கிறது. நடிகைகள் சம்பளத்தில் 20 சதவீதத்தை பிடித்தம் செய்து அவற்றில் 10 சதவீதத்தை பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிறகு கொடுக்கவும் மீதி 10 சதவீதத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு நடிகர் சங்கத்தின் ஒத்துழைப்பை கேட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், வியட்நாம் வீடு சுந்தரம், ஆர்.கே.செல்வமணி, கோலாகலம் பட டைரக்டர் பி.ஜி.சுரேந்திரன், நாயகன் அமல், இசையமைப்பாளர் பரணி, ஒளிப்பதிவாளர் கே.எஸ்.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *