‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் மூலம் பிரபலமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். மோசடி வழக்குகளில் கைதாகி ஜெயிலுக்கு போய் வந்துள்ளார். தற்போது படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரிலீசான ‘கோலி சோடா’ படத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தில் நடித்ததற்காக தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது:–
‘கோலி சோடா’ படத்தில் நடிக்க என்னிடம் ஆறு நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். ஆனால் நான் நடித்த காட்சிகளை மூன்றே நாட்களில் எடுத்து விட்டனர். இந்த படத்தில் நடிப்பதற்காக என்னிடம் சிறிய தொகையை மட்டும் கொடுத்தார்கள். மீதி பணத்தை அப்புறம் தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் கடைசி வரைக்கும் அந்த பணத்தை தரவே இல்லை.
நான் ஏமாற்றப்பட்டு உள்ளேன். எனக்கு வர வேண்டிய சம்பள பணத்தை தாருங்கள் என்று கேட்டேன். தர முடியாது போய்யா என்றார்கள். யாரிடம் வேண்டுமானாலும் போய் புகார் செய்துக்கோ என்று கேவலமாக பேசுகிறார்கள். ஆனால் நான்தான் மற்றவர்களை ஏமாற்றுவதாக சொல்கிறார்கள். உண்மையில் நான்தான் ஏமாறுகிறேன். கஷ்டப்பட்டு உழைக்கிறேன். அந்த உழைப்புக்கான சம்பளத்தை தராமல் ஏமாற்றுவது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு பவர்ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார்.