வெங்கட்பிரபு இயக்கத்தில், கார்த்தி – ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிரியாணி.’ யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார். இது அவருக்கு 100-வது படம்.
முதலில் ரம்ஜான் தினத்தன்று படத்தை வெளியிட முடிவு செய்தது படத்தைத் தயாரித்து வரும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம். ஆனால், வெங்கட்பிரபு ஷூட்டிங்கை முடிக்காமல் இழுத்தடித்தார்.
பின்னர், தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுத்து பாடல்களை வெளியிட்டனர். ஆனால், தீபாவளிக்கும் படத்தை ரிலீஸ் செய்யவில்லை.
அதற்குப் பதிலாக கார்த்தி நடித்த மற்றொரு படமான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வை ரிலீஸ் செய்கிறார்கள். இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ராஜேஷ் இயக்கி உள்ளார்.
‘பிரியாணி’யை தள்ளிப்போட்ட காரணத்தை விசாரித்தால்… ‘பிரியாணி’ படத்தைப் பார்த்த கார்த்திக் தரப்பினருக்கு திருப்தி இல்லை என்கிறார்கள். சில காட்சிகளை மறுபடியும் எடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார்களாம்.
ஆனால், வெங்கட்பிரபு அதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே போக… இப்போதைக்கு இது முடியாது என நினைத்த கார்த்திக் தரப்பினர், அவசர அவசரமாக ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வை முடிக்கச் சொல்லி ‘தீபாவளி ரிலீஸ்’ என அறிவித்து விட்டனர்.