Search

Fake Complaint Against Rambha says her Brother

Rambha

நடிகை ரம்பா மீது என் மனைவி பொய் புகார் அளித்துள்ளார் என்று ரம்பாவின் அண்ணன் சீனிவாசராவ் கூறினார்.

‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘அருணாசலம்’, ‘சுந்தரபுருஷன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்பா. இவருக்கு 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கனடாவில் கணவருடன் வசிக்கிறார். ரம்பா மீது அவரது அண்ணன் சீனிவாசராவ் மனைவி பல்லவி ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

சீனிவாசராவும், ரம்பாவும் சேர்ந்து வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து ரம்பா மீதும் சீனிவாசராவ் மீதும் வழக்குப் பதிவு செய்ய போலீசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் நேற்று இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இந்த புகாருக்கு பதில் அளித்து ரம்பாவின் அண்ணன் சீனிவாசராவ் சென்னையில் இன்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ரம்பா மீது என் மனைவி பல்லவி பொய் புகார் அளித்துள்ளார். எனக்கும், பல்லவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருக்கிறோம். ரம்பா திருமணத்துக்கு பிறகு கனடாவில் வசிக்கிறார். கடந்த சில வருடங்களாக அவர் இந்தியாவுக்கே வரவில்லை. அவர் எப்படி பல்லவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த முடியும். இது அப்பட்டமான பொய் புகார்.

பல்லவியின் அக்காள் மும்பையில் நகைக்கடை வைத்துள்ளார். அந்த கடையில் கண்காட்சிக்கு வைக்க ரம்பாவின் தங்க, வைர நகைகளை வாங்கி சென்றனர். பிறகு அதை திருப்பி தரவில்லை. நான் பலதடவை வற்புறுத்தி கேட்டும் தராமல் இழுத்தடிக்கின்றனர். நகைகள் ஐதராபாத்தில் இருக்கிறது என்றார்கள். தொடர்ந்து கட்டாயப்படுத்தி நகைகளை வாங்கி சென்னையில் உள்ள என் வீட்டில் வைத்து இருந்தேன். அப்போதுகூட சில நகைகளை அவர்கள் தரவில்லை. வைர நகையில் கல்லையும் மாற்றி விட்டார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் கனடா போனேன். அப்போது என் மனைவி பல்லவி சென்னை வந்து பள்ளியில் படித்த என் குழந்தைகளை அழைத்து சென்று விட்டார். அதோடு வீட்டில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான ரம்பாவின் நகைகளையும் எடுத்து போய்விட்டார். எனது தந்தை விருகம்பாக்கம் போலீசில் பல்லவி நகைகளை எடுத்து போய்விட்டதாக புகார் அளித்தார்.

அதன்பிறகு சில தினங்கள் கழித்து என் மீது எனது மனைவி பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக புகார் செய்தார். அந்த புகாரில் ரம்பா பெயர் இடம் பெறவே இல்லை. இப்போது கோர்ட்டில் என் மீதும், ரம்பா மீதும் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதனால் அதிர்ச்சியானேன். பல்லவி எடுத்து சென்ற நகைகளை கேட்க வேண்டாம் என்றுதான் ரம்பா கூறினார். அவர் மீது வீண்பழி சுமத்தி உள்ளார். 4 வருடமாக கனடாவில் இருக்கும் ரம்பா எப்படி என் மனைவியை அடித்து இருக்க முடியும்.

பல்லவி அண்ணன் ரவி கிரண், அண்ணி சம்யுக்தா ராணி, அம்மா பிரியகுமாரி, அக்காள்கள் சாந்தி, மாதவி தூண்டுதல் பேரில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது. பல்லவியை நான் திருமணம் செய்தபோது ரூ.5 ஆயிரம் வாடகை வீட்டில் இருந்தனர். இன்று பெரிய பங்களா, 3 பிளாட்டுகள் இருக்கிறது. சாதாரண குடும்பத்து பெண் போதும், வரதட்சணை வேண்டாம் என்று சொல்லிதான் அவரை மணந்தேன். எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள். வழக்கை சட்டப்படி சந்திப்போம்.

இவ்வாறு சீனிவாசராவ் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *