இஷ்டத்துக்கு டைட்டில் வைத்து குழப்பாதீர்கள். என் பட டைட்டிலை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் இயக்குனர் கே.வி.ஆனந்த். சிவாஜி, செல்லமே, முதல்வன் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.வி.ஆனந்த் கனா கண்டேன் படம் மூலம் இயக்குனர் ஆனார். அயன், கோ, மாற்றான் படங்களையடுத்து புதிய படம் இயக்குகிறார். தனுஷ் ஹுரோவாக நடிக்கும் இப்படத்துக்கு தாரை தப்பட்டை ரெடி என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவியது. இது பற்றி கே.வி.ஆனந்த் கூறியதாவது: ஒரு படத்துக்கு ஸ்கிரிப்ட் எவ்வளவு முக்கியமோ அதுபோல் டைட்டிலுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. இதற்காக மெனக்கெட்டு தகுந்த தலைப்புகள் தேர்வு செய்யப்படுகிறது. அடுத்து இயக்கும் படத்துக்கு தாரை தப்பட்டை ரெடி என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை டைட்டிலை இறுதி செய்யவில்லை. தற்போதைக்கு இசை கம்போசிங் பணிகள் மட்டும்தான் முழுவேகத்தில் நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும். சமீபத்தில் ஒரு சில படங்களுக்கு தாமதமாக தலைப்பு வைத்து உள்ளனர். அதற்குள் அந்த படத்துக்கு அவரவர்கள் தாங்களாகவே தலைப்பு வைத்தார்கள். இது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அதனால் யாரும் குழப்பம் செய்ய வேண்டாம்.