Search

Director Vijaya Manojkumar Interview

uyirukku-uyiraga-movie-hot-stills-11

தன் ‘உயிருக்கு உயிராக’ படம் பற்றிக் கூறும்போது ,”தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் தத்தளிக்கிறேன். ” என்று கூறுகிறார்.இயக்குநர் விஜய மனோஜ்குமார்.

இந்த மகிழ்ச்சியின் பின்னணி பற்றிக் கேட்ட போது,

“நான் இதுவரை 23 படங்கள் இயக்கியிருக்கிறேன். என் 24 வது படம் ‘உயிருக்கு உயிராக’ நான் ஒவ்வொரு படம் எடுத்த போதும் என் குருநாதர் பாரதிராஜா அவர்களுக்குப் போட்டுக் காட்டுவேன்.
நம்மிடம் உதவியாளராக இருந்தவன் படம் எடுத்திருக்கிறான் என்ற அளவில் மகிழ்வார் அவ்வளவுதான். என்னைப் பெரிதாக பாராட்டியதே இல்லை. ஒருகட்டத்தில் ‘என்னடா படம் எடுக்கிறே நீ திருந்தவே மாட்டியா?’ என்று திட்டியிருக்கிறார். ‘வானவில்’ பார்த்து கொஞ்சம் பாராட்டினார். ஆனால் இந்த ‘உயிருக்கு உயிராக’ படம் பார்த்துவிட்டு மட்டும் மனம் திறந்து பாராட்டினார். எப்படிடா இது? நான் உன்னிடம் இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கலை.. ரொம்ப சந்தோஷம். இப்போ நீ என்னிடமிருந்து வந்தவன்கிறதுல சந்தோஷம்டா’ என்று பாராட்டினார். இது எனக்கு இன்ப அதிர்ச்சி. தேசிய விருது மாநிலவிருது என எல்லா விருதுகளும் கிடைத்த மாதிரி பெருமையாக பூரிப்பாக இருந்தது”.மகிழ்ச்சியில் நனைந்து கொண்டிருக்கிறார் விஜய மனோஜ் குமார்.

அப்படி என்னதான் படத்தில் வைத்திருக்கிறார் விஜய மனோஜ்குமார் என்ற போது-

“நான் இந்தக் காலக்கட்டத்து இளைஞர்களுக்கான, மாணவர்களுக்கான கதை சொல்லியிருக்கிறேன். இன்றைக்கு கல்வியில் உள்ள பிரச்சினையைச் சொல்லியிருக்கிறேன்.

கல்லூரிப் பின்னணியில் நடக்கும் காதல் கதைதான் இது என்றாலும் இளைய சமுதாயம், பெற்றோர்களுக்குமான கருத்தையும் சொல்லி இருக்கிறேன்.

பொதுவாக கல்லூரி மாணவர்கள் என்றால் ஜாலி, அரட்டை, பெண்கள், கேலி, கிண்டல் என்றே காட்டப்பட்டு வருகிறார்கள். மாணவ சமுதாயம் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று ஏரோநாடிக், கம்ப்யூட்டர் படித்த இரண்டு மாணவர்களை வைத்து சொல்லியிருக்கிறேன். வருங்காலத்தில் போர் வந்தால் இந்தப் பூமியிலேயே நடக்காது. ஆகாய வெளியில்தான் போரின் சேதாரங்கள் இருக்கும் என்றும் அதற்கான தீர்வு என்ன என்றும் மாணவர்களைக் கொண்டு சொல்லி இருக்கிறேன்”என்கிறார்.

படத்தின் கதை கல்லூரியில் படிக்கும் காலத்தில் நிகழாமல் படிப்பை முடித்துவிட்டு கேம்பஸ் இண்டர்வியூ காலத்தில் தொடங்குகிறது கல்லூரிப் படிப்பு முடிகிற போது அவர்கள் சந்திக்கும் சவால்களைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இது நகரத்தில் நடக்கும் கதை. எனவே சென்னை, ஊட்டி, மலேசியா என்று பயணப்பட்டிருக்கிறது படக்குழு. பல முக்கிய காட்சிகள் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் படமாக்கப் பட்டுள்ளன.

பெரும்பாலும் புதுமுக நடிகர்களின் ஆதிக்கத்தில் படம் உருவாகியுள்ளது. பிரபு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடித்தவர்கள் பற்றி விஜய மனோஜ்குமார் கூறும் போது,

“இப்படத்தில் புது முகங்களை வைத்து இயக்கியது புது அனுபவம். சஞ்சீவி, சரண்குமார், ப்ரித்திதாஸ்,நந்தனா நாலுபேரும் ஆர்வமாக ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுத்தார்கள்.

சஞ்சீவ், சரண் துடிப்பானவர்கள். ஊட்டியில் 6மணிக்கு படப்பிடிப்பு என்றால் அனைவரும் 5.30 மணிக்கே மேக்கப்புடன் தயாராக இருப்பார்கள். நந்தனா நல்ல நடிகை என்று பெயரெடுப்பார். ப்ரீத்திதாஸ் தமிழே தெரியாத நிலையிலும் கற்றுக் கொண்டு ஆர்வமாக பேசியது வியப்பாக இருந்தது. ஆரம்பத்தில் நந்தனாவையே கதாநாயகியாக நடிக்க வைப்பதாகத்தான் இருந்தேன். ஆனால் கதையைக் கேட்டபிறகு வில்லத்தனம் கொண்ட இன்னொரு வேடத்தில் நடிக்கிறேன் என்றார். அவரது ஈடுபாட்டை கண்டு வில்லியாக மாற்றினேன். ப்ரீத்தியை கதாநாயகியாக நடிக்க வைத்தேன். இந்த அளவுக்கு நடிப்பு மீது ஆர்வமுள்ள நடிகைகள் வர ஆரம்பித்துள்ளது நல்ல விஷயம்.

இதில் பிரபு முக்கியமான பாத்திரத்தில் அப்பாவாக வருகிறார். பிள்ளைகள் காதல் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளும் போது பெற்றோர் எப்படி அவர்களைக் கையாண்டு கரைசேர்க்க வேண்டும். அவர்களின் கடமை எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர் பாத்திரம் அழகாகச் சொல்லும். இந்தப் படத்துக்குப் பின் எல்லா இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பிரபுவைப் பிடிக்கும்.” உற்சாகமாகக் கூறுகிறார் விஜய மனோஜ் குமார்.

முதல்படமே நடிகர் திலகத்தை வைத்து இயக்கினார், பிரபு, சத்யராஜ், சரத்குமார், பிரசாந்த், ராம்கி, ராமராஜன், அர்ஜுன், பிரகாஷ்ராஜ் என பல்வேறுபட்ட நடிகர்களை வைத்து இயக்கிய இவர், புதுமுகங்களை வைத்து இயக்கியது குறித்து கூறும் போது “நான் நடிகர்திலகம் முதல் இளைய திலகம் வரை பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்கியிருக்கிறேன். இதுவும் ஒரு புதிய அனுபவம்தான். இளைஞர்களுடன் சேரும் போது நானும் இளைஞனான மாதிரி, வயது குறைந்த மாதிரி உணர்கிறேன்.” என்கிறார்.

இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களைப் பயன்படுத்திய இயக்குநர் இப்படத்தில் ஷாந்தகுமார் என்கிற புதியவரை அறிமுகம் செய்கிறார். மதர் லேண்ட் பிக்சர்ஸ் படங்களும் இசையால் பேசப்பட்டவை. இந்த எதிர்பார்ப்பை புதிய ஷாந்தகுமார் நிறைவேற்றுவார் என நம்பிக்கையுடன் கூறுகிறார் விஜய மனோஜ்குமார். ஒளிப்பதிவு ஆனந்தகுமார் இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் மாணவர்.

முதல் பட வாய்ப்பு கொடுத்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் சற்று இடைவெளியில் இருந்த மனோஜ்குமாரை அழைத்து ‘உயிருக்கு உயிராக’ படவாய்ப்பை வழங்கியுள்ளது. கோவைத் தம்பி மறுபிரவேச வாய்ப்பை வழங்கியது மட்டுமல்லாமல் பெயரையும் மாற்றி ‘விஜய மனோஜ்குமார்’ என்று புது அவதாரம் எடுக்க வைத்துள்ளார்.

மாணவர், கல்லூரி, கல்வி, நடப்பு இளைஞர் சமுதாயம் என்ற அம்சங்கள் இருந்ததால் படத்தின் கதை எஸ் ஆர் எம் பாரிவேந்தருக்குப் பிடித்து விட்டது. எனவே படத்தை வேந்தர் மூவீஸ் வாங்கி வெளியிடுகிறது.

‘உயிருக்கு உயிராக’மீது வேந்தர் மூவீஸின் வெளிச்சம் விழுந்தபின் அதன் எதிர்பார்ப்பும் வெற்றி வாய்ப்பும் விரிவடையத் தொடங்கி விட்டன.

பாச உணர்ச்சிளை படம் பிடிப்பதில் தனி முத்திரை படைத்தவர் இவர். இப்படத்தில் அது இருக்குமா? ” நிச்சயம் அந்த செண்டி மெண்ட் பிரபு கதாபாத்திரத்தின் மூலம் உணர முடியும்”என்றவர் இன்னொரு செண்டிமெண்ட் தகவலையும் கூறினார்.

“உயிருக்கு உயிராக’ 2014 ஜனவரி–25 சனிக்கிழமை வெளியாக இருக்கிறது. மதர்லேண்ட் பிக்சர்ஸ்க்கு சனிக்கிழமை வெற்றி செண்டிமெண்ட் உண்டு”

அந்த செண்டிமெண்ட் தான் ஜெயிக்கட்டுமே!
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *