குஜராத்தில் நவராத்திரி விழாவின்போது கர்பா நடனம் இடம்பெறுவது வழக்கம். இதற்காக முக்கிய பகுதிகளில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதில் பிரபல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்பார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற கர்பா நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் அவரது படக்குழுவினர் கலந்துகொண்டனர். ரசிகர்களின் வரவேற்பில் திளைத்த தீபிகாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தீபிகா நடித்துள்ள ராம் லீலா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழா நடைபெறும் இடத்தை நெருங்கிய போராட்டக் குழுவினர், தீபிகா மீதும் போட்டி ஏற்பாட்டாளர்கள் மீதும் முட்டைகள் மற்றும் தக்காளிகளை வீச தயாராக இருந்தனர். பின்னர் படக்குழுவினரின் சமரச முயற்சியையடுத்து அவர்கள் கலைந்து சென்றதாக செய்தி வெளியாகி உள்ளது.
முட்டை வீச்சு சம்பவம் நடப்பதை முன்கூட்டியே தடுத்ததால், தீபிகா எந்த டென்ஷனும் இல்லாமல் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி வரும் ராம் லீலா திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் லட்சிய படமான ‘ராம் லீலா’வின் டிரெய்லர் வெளியானதில் இருந்தே சர்ச்சையில் சிக்கி வருகிறது. தங்கள் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி ராபரி சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.