தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்கு விளக்கம் அளிக்குமாறு நடிகர் அமீர் கானுக்கு சண்டிகர் நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த மாதம் 19-ம் தேதி ஒளிபரப்பாகிய ‘சத்யமேவ் ஜெயதே’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அமீர் கான், ஓரினச் சேர்க்கை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு மாறுபட்ட வகையில் ஓரினச் சேர்க்கையை நியாப்படுத்துவது போல் பேசியதாகவும், தடுக்கப்பட்ட குற்றத்தை நியாயப்படுத்துவதுடன், இது கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும் எனவும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான மந்தீப் கவுர் என்பவர் சண்டிகர் உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இம்மனுவின் மீது நேற்று விசாரணை நடத்திய நீதிபதி ஜஸ்வீந்தர் சிங், வரும் டிசம்பர் 19-ம் தேதிக்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நடிகர் அமீர் கானுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளார்.