Search

Case Against Actress Manorama

manorama

தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்திரம் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மனோரமா. இவர் சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு, அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், மனோரமாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சொத்துப் பிரச்சினை காரணமாக மனோரமாவின் பேத்தி அபிராமி (வயது 25), மனோரமாவின் பேரன் ராஜராஜன் மீது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எனது பாட்டி மனோரமா பிரபலமான நடிகை. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் அவருக்கு சொத்து உள்ளது. தற்போது மனோரமா உடல் நலம் பாதிக்கப்பட்டு மிக சீரியஸான நிலையில் உள்ளார். தன்னை சுற்றி என்ன நடைபெறுகிறது என்று அவருக்கு தெரியாத நிலை உள்ளது. எனது தந்தை பூபதி, மதுவுக்கு அடிமையாகி சுயநினைவில்லாமல் இருக்கிறார். அவர்கள், தி.நகரில் உள்ள வீட்டில் தற்போது இருக்கிறார்கள்.

இந்நிலையில், இருவரின் உடல் நலக்குறைவை தனக்கு சாதகமாக பயன்படுத்திய எனது அண்ணனான டாக்டர் ராஜராஜன் எனது பாட்டியின் பல அசையா சொத்துக்களை தனது பெயருக்கு விற்பனை பத்திரம் செய்து கொண்டார். சட்ட விதிமுறைகளுக்கு முரணாக அவர் சொத்துக்களை தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.

சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகளின் துணையுடன் விற்பனை ஒப்பந்த பத்திரத்தை மனோரமா வீட்டில் வைத்தே பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து எங்களுக்கு எந்த தகவலும் தரப்படவில்லை. இந்த பத்திரப்பதிவு மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளின்படி எங்களுக்கு சமபங்கு தரப்பட வேண்டும். ஆனால், சட்ட விதிகளுக்கு முரணாக எங்களுக்கு தெரியாமல் சொத்துக்களை ராஜராஜன் அபகரித்து விட்டார்.

இது தொடர்பாக கடந்த மே 5-ந் தேத்தி ராஜராஜனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு அவர் மனோரமாவின் பெயருக்கு பதில் அளித்தார். மனோரமாவால் எதுவும் செய்யமுடியாத நிலையில் ராஜராஜனின் நோட்டீசுக்கு பதில் தரமுடியவில்லை.

இந்நிலையில், சொத்துக்களை விற்பனை செய்ய ராஜராஜன் முயற்சி செய்து வருகிறார். பல நில புரோக்கர்கள் மனோரமாவின் சொத்துக்களை பார்வையிட்டு வருகிறார்கள். இந்த சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டால் எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும்.

எனவே, மனோரமாவின் சொத்துக்களை ராஜராஜன் பதிவு செய்தது செல்லாது என்று உத்தரவிடவேண்டும். ராஜராஜனோ அல்லது அவரது ஆட்களோ மனோரமாவின் சொத்துக்கள் மீது உரிமை கொண்டாடுவதற்கு தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு 5-வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி காந்தன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு மீது மனோரமா, அவரது மகன் பூபதி, அரவது மனைவி தனலட்சுமி, பேரன் ராஜராஜன், பேத்தி மீனாட்சி உள்ளிட்டோர் வரும் 23-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *