Search

Beep Song : Simbhu New Request

str

அனிருத் இசையில் நடிகர் சிம்பு பாடியதாக இன்டர்நெட்டில் வெளியான ‘பீப்’ பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இருவரையும் கண்டித்து மகளிர் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. கவிஞர்கள், பாடலாசிரியர்கள் என பல தரப்பினரும் சிம்பு மற்றும் அனிருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவையில் மகளிர் அமைப்பினர் கொடுத்த புகாரின்பேரில் சிம்பு, அனிருத் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக இன்று(19–ந் தேதி) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

இதற்கிடையே, கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், போலீசார் அனுப்பி உள்ள சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என நடிகர் சிம்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி போலீசார் அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். அதேநேரம், போலீஸ் தரப்பில் வருகிற 5–ந் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதனால் சிம்பு, அனிருத் ஆகியோர் இன்று ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்தநிலையில் சிம்பு சார்பில் அவரது தந்தை டி.ராஜேந்தர், அனிருத் சார்பில் அவரது தந்தை ரவி ராகவேந்தர் ஆகியோர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு தபால் மூலம் விளக்க கடிதம் அனுப்பி உள்ளனர்.

சிம்பு சார்பில் அனுப்பிய கடிதத்தில், சிம்பு தற்போது சினிமாவில் பிசியாக உள்ளார். எனவே அவர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராக ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அனிருத் சார்பில் அனுப்பிய விளக்க கடிதத்தில், இன்டர்நெட்டில் வெளியான ‘பீப்’ பாடலுக்கு அனிருத் இசையமைக்கவில்லை. இந்த வழக்குக்கும் அனிருத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனவே இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கூறியதாவது:–

சிம்பு, அனிருத் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு அனுப்பிய சம்மனை இருவரது தந்தை பெற்றிருந்தனர். தற்போது இருவரது தந்தை பெயரில் விளக்க கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இருவரும் நேரில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்புவது குறித்து அரசு வக்கீல்களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *