Search

Beep Song Controversy : Police Summoned to STR and Anirudh

str-anirudh

நடிகர் சிம்பு பாடி, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாக கூறி பீப் பாடல் ஒன்று சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. இந்த பாடல் பெண்களை இழிவுப்படுத்தும் விதத்தில் இருப்பதாக பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கோவை மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து பீப் பாடல் பாடிய சிம்பு மீதும், அப்பாடலுக்கு இசையமைத்ததாக இசையமைப்பாளர் அனிருத் மீதும் புகார் அளித்தனர். அதில் பெண்களை கேவலப்படுத்தும் நோக்கத்தோடு பாடலை இயற்றி பாடி, அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் இந்த மனு மீது விசாரணை நடத்த ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்பு மற்றும் அனிருத் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து சிம்பு மற்றும் அனிருத்துக்கு ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்மன் அனுப்பினர். அதில் பெண்களை கேவலமாக சித்தரிக்கும் வகையில் பாடல் பாடியுள்ளதாக உங்கள் மீது வழக்குப் பதியப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் நீங்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த சம்மனை சிம்பு, அனிருத் ஆகியோருக்கு நேரில் கொடுப்பதற்காக ரேஸ் கோர்ஸ் போலீஸ் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு போலீஸ்காரர் நேற்று இரவு சென்னை புறப்பட்டு சென்றார். அவர் இன்று இருவரிடமும் சம்மனை அளிக்க உள்ளார்.

இதற்கிடையே சிம்பு மீது பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் மத்தியிலும் அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. கோவையை தொடர்ந்து சேலம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்து முன்னணி சார்பில் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்திலும், சிம்பு, அனிருத் மீது புகார் கொடுக்கப்பட்டது. சிம்பு, அனிருத் ஆகிய 2 பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி கோர்ட்டிலும் வழக்கு தொடர இந்து முன்னணியினர் முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பிலும் நடிகர் சிம்புவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னிவாடி பஸ் நிலையம் முன்பு நடிகர் சிம்புவின் உருவ பொம்மையை மாதர் சங்கத்தினர் எரித்து அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சிம்புவுக்கு எதிராக கண்டன போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சிம்பு, அனிருத் ஆகியோரை கண்டித்து விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள், சிம்புவின் உருவப் பொம்மையை தீ வைத்து எரித்தனர்.

கோவில்பட்டி மாதா கோவில் தெருவில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நகர தலைவி முத்துலட்சுமி, செயலாளர் விஜயலட்சுமி மற்றும் உறுப்பினர்கள் திரண்டு வந்து சிம்புவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் சிம்புவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், அனிருத் இந்த பாடலுக்கு தான் இசையமைக்கவில்லை. எதிர்பாராதவிதமாக தன் பெயரை இந்த சர்ச்சையில் இழுத்துவிட்டார்கள் என்று ‘பீப் சாங்’ சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *