Search

I Audio Launched as Grant

1

 

 

மிஸ்டர் பிரம்மாண்டம் ஷங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஐ திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலந்து கொண்டார். சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

விழாவில் ரஜினி பேசுகையில், “ஷங்கர் ஒரு வித்தியாசமான இயக்குனர். ஹாலிவுட் தரம் கொண்ட படங்களை தமிழ் மண்ணை சேர்ந்தவர்களாலும் இயக்க முடியும் என்று உலகிற்கு நிரூபித்து காட்டுபவர். அந்தளவுக்கு கடும் உழைப்பை கொடுத்து ஹாலிவுட் திரை உலகை தமிழ் சினிமா உலகை நோக்கி திரும்பவைத்துள்ளார்” என்று ரஜினி பாராட்டினார்.

அர்னால்ட் பேசுகையில், “சென்னைக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் மீண்டும் சென்னை வருவேன். ஒரு இண்டர்வியூக்காக தான் நான் சென்னை வந்தேன். அதுவும் கூட இயக்குனர் ஷங்கருடன் தான். விரைவில் அவர் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று அர்னால்ட் பேசினார்.

விழாவில் பங்கேற்ற அர்னால்ட் முன் பல்வேறு இளைஞர்கள் தங்கள் கட்டுமஸ்தான உடல்வாகை காண்பிக்கும் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி தாங்களும் ஆணழகன் தான் என நிரூபித்தனர். இளைஞர்களின் நிகழ்ச்சி பற்றி அர்னால்டிடம் கேட்ட போது, தன்னை கடந்த காலத்திற்கு இந்நிகழ்ச்சி அழைத்து சென்றதாக கூறினார்.

பின்னர் அந்த இளைஞர்களுடன் அவர் சிறிது நேரம் உரையாற்றினார். இப்படத்தின் கதாநாயகன் விக்ரம் கூறுகையில், “ஒரு சிலருக்கு கனவில் ஒரு கற்பனை படம் தோன்றும். அது போன்ற படங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசையும் இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை இப்படம் கனவை மீறிய சிறந்த படமாக அமைந்துள்ளது.

அந்த அளவுக்கு படம் மிக அருமையாக வந்துள்ளது. இப்படத்திற்காக எனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளேன். அதனாலேயே வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். அதையும் மீறி என்னை பார்த்தவர்கள் சிலர் என்ன இப்படி இளைத்துவிட்டீர்கள் என்று கேட்டனர்” என கூறினார்.

விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசிய ஒளிநாடா ஒன்று வெளியானது. அதில் இப்படத்தில் மேக்கப் முக்கிய வேடத்தை ஏற்றுள்ளது. இப்பணியை கடமையாக கருதாமல் கலையாக கருதி வீட்டா நிறுவனம் உழைத்தாக ஷங்கர் பாராட்டினார். விக்ரமுக்கு நாளொன்றுக்கு மேக்கப் போட மூன்று மணி நேரமாகும்.

அந்த மூன்று மணி நேரமும் மிகுந்த கவனத்துடன் வீட்டா நிறுவனமும், மிகுந்த பொறுமையுடன் விக்ரமும் காத்திருந்தார் என்று ஷங்கர் அந்த ஒளிநாடாவில் பேசினார். விழாவுக்கும் கூட படத்தில் வரும் பிசாசு கெட்டப்பிலேயே விக்ரம் வந்தார். இன்றும் கூட மேக்கப்பிற்காக மூன்று மணி நேரம் செலவானதாக ஷங்கர் கூறினார்.

இப்படத்தில் இசையமைப்பாளர் அனிரூத்தும் ஒரு பாடலை பாடியுள்ளார். தான் பாடிய அனுபவம் குறித்து அனிரூத் கூறுகையில், “நான் சிறுவயதில் இருந்தே ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஷங்கர் ஆகியோரின் தீவிர ரசிகன். இப்படத்தில் இவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு கிடைத்த ஆசிர்வாதமாக கருதுகிறேன். என்னை பாட அழைத்தபோது முதலில் பயந்துவிட்டேன்.

ஆனால் பாடல் ரெக்கார்டிங்கின் போது என்னிடம் ரகுமான் சார் சகஜமாக பழகியதால் அந்த பயம் பறந்துபோனது” என்று அனிருத் கூறினார். முடிவில் படத்திற்கான ஆடியோவை புனித் ராஜ்குமார் வெளியிட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இறுதியில் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு ஷங்கர் நன்றி தெரிவித்து பேசினார்.