அருள்நிதி-பூர்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தகராறு’. கணேஷ் இயக்கியுள்ள இந்த படத்தை துரை தயாநிதியின் கிளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்று படம் குறித்து சுவராஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது அருள்நிதி பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது:-
‘தகராறு’ எனக்கு முக்கியமான படமாக இருக்கும். என்னுடைய கேரக்டரை ரொம்ப அழகாக பண்ணியிருக்கிறார் இயக்குனர் கணேஷ். ஹீரோவுக்கான எல்லா விஷயமும் இந்த படத்தில் இருக்கும்.
இந்த படத்தை தயாரிக்கிறது என்னோட அண்ணன் துரை தயாநிதி. எனக்கும் அவனுக்கும் பத்து மாசம்தான் வித்தியாசம். ஆனால் நானும் அவனும் அண்ணன் தம்பி மாதிரி பழக மாட்டோம். என்னோட உயிர் நண்பன் அவன். இந்த படத்தை அவன் எனக்காகவே தயாரித்தான்.
இந்த படத்துக்கு முதலில் பகல் கொள்ளைன்னுதான் தலைப்பு வச்சோம். அப்புறம் நீங்கள்லாம் சும்மாயிருக்க மாட்டீங்கன்னு தெரியும். அதனால்தான் தகராறுன்னு மாத்துனோம். டைரக்டர் கணேஷ் தினமும் ஐம்பது தலைப்பாவது எழுதிட்டு வருவாரு. எதுவும் பிடிக்கலேன்னு மறுபடியும் தேடுவோம். ஒருநாள் துரைதான் இந்த டைட்டில் தேடுறது பெரிய தகராறா இருக்குன்னு சொல்ல, தகராறு நல்லாயிருக்கேன்னு இதை தலைப்பா வச்சோம். அந்த ஆண்டவன் புண்ணியத்துல கடைசியா இந்த டைட்டில் கிடைச்சுது என்றார்.
யாரும் நான் இன்னாரோட பேரன்னு நினைச்சு எழுதாதீங்க, பேசாதீங்க. இந்த படத்தை பொருத்தவரை நான் ஒரு நடிகன். அவ்வளவுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.