சமீபத்தில் இந்தி நடிகர் ஓம் பிரகாஷின் மருமகள் பூனம் கண்ணாவை சனாகான் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். சனாகானின் காதலர் மற்றும் வீட்டு வேலைக்காரப் பெண் ஆகியோரும் கைதானார்கள். பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
நான் எந்த தப்பும் செய்யவில்லை என்றும் எனக்கு எதிராக சதி செய்து போலீசில் சிக்க வைத்து விட்டனர் என்றும் சனாகான் கூறினார். இந்த நிலையில் பூனம் கண்ணா மீது மும்பை ஒஷிவாரா போலீஸ் நிலையத்தில் சனாகான் பரபரப்பு புகார் அளித்தார்.
அதில் மும்பையில் தனக்கு வீடு வாங்கித் தருவதாக பூனம் கண்ணா என்னிடம் தெரிவித்தார். அதற்கு முன்பணமாக ரூ.9 லட்சம் வாங்கிக் கொண்டார். ஆனால் அவர் சொன்னபடி வீடு வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சனாகானிடம் மோசடி செய்ததாக பூனம் கண்ணாவை கைது செய்தனர். பூனம் கண்ணா இன்று மும்பை அந்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.