சமீபகாலமாக அரசியல் கலந்த கதையில் வெளிவரும் படங்கள் பெரும் பிரச்சினையை சந்தித்து வருகிறது. அந்த வகையில் அரசியல் சாயம் பூசி வெளிவந்த விஜய்யின் ‘தலைவா’ படம் பெரும் பிரச்சினையை சந்தித்தது. இதையடுத்து, அரசியல் கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதென்றாலே பெரும்பாலான ஹீரோக்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.
இந்நிலையில், ‘எங்கேயும் எப்போதும்‘, ‘ராஜாராணி’ என காதல் கதைகளில் நடித்துவந்த நடிகர் ஜெய் முதன்முறையாக அரசியல் கதையம்சம் உள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சித்தார்த் நடிப்பில் வெளிவந்த ‘உதயம் என்.எச்.4. படத்தை இயக்கிய மணிமாறன் இயக்குகிறார். இந்த படத்திற்கு ‘பொடியன்’ என பெயர் வைத்திருக்கின்றனர்.
படம் குறித்து மணிமாறன் கூறும்போது, ‘பொடியன்’ நட்பு மற்றும் அரசியல் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் முதன்முறையாக ஜெய்யுடன் இணைந்து பணியாற்றுகிறேன். ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சிறுவர்களைத்தான் பொடியன் என்று அழைப்பார்கள். ஆனால், இந்த படத்தை பார்த்தபிறகு பொடியன் என்பதற்கான பொருளை அவர்கள் மாற்றிக் கொள்வார்கள். அதன்பிறகு சிறுவர்களை பொடியன் என்று யாரும் அழைக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.