Search

Actor Ashokpandiyan’s Press Release

unnamed (1)

சமீபகாலமாக வெளியான சில படங்களில் தும்பை பூவைப்போன்ற நரைத்த தலையுடன், ஆனால் கம்பீரமான தோற்றத்துடன் கூடிய ஒருவரை டாக்டராக, போலீஸ் அதிகாரியாக, தொழிலதிபராக, கதாநாயகியின் தந்தையாக என பல பரிமாணங்களில் பார்த்து இருப்பீர்கள்.. அப்படி ஒருவர் உங்களை கவனம் ஈர்த்து இருந்தால் நிச்சயம் அந்த நபர் அசோக் பாண்டியனாகத்தான் இருப்பார்.

இன்று குணச்சித்திர துணை காதாபாத்திரத்திற்கான தேடலில் உள்ள பல இயக்குனர்களும் தங்களது படத்திற்கான நடிகர்கள் பட்டியலில் இவரது பெயரை ஆரம்பத்திலேயே டிக் பண்ணி வைத்து விடுகின்றனர்.. அந்த அளவுக்கு அசோக் பாண்டியன் குறுகிய கால அளவில் திரையுலகில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

சினிமா ஆசை யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதிலும் வரலாம்.. அதனால் மதுரையை சேர்ந்த அசோக் பாண்டியனுக்கு 2012ல், தான் மிலிட்டரியில் இருந்து ஓய்வுபெற்றபோது தோன்றியதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.. 2000ல் கார்கில் போரில் பங்குபெற்று, அதன்பின்னர் ஓய்வுபெற்று ஊர் திரும்பிய அசோக் பாண்டியன் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் பத்து வருடங்களுக்கு மேலாக உடற்கல்வி ஆசிரியாக பணியாற்றி வந்துள்ளார்..

2012ல் முதன்முதலில் இவருக்குள் இருந்த நடிகனை கண்டுபிடித்து தான் இயக்கிய ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்கை’ படம் மூலமாக அவருக்கு வாய்ப்பளித்தது இயக்குனர் சேரன் தான். அந்த வாய்ப்பு கிடைத்தே சுவாரஸ்யம் தான் என்கிறார் அசோக் பாண்டியன்..

காரணம் தனது நண்பர்களான விஷ்வந்த் மற்றும் ‘பசங்க’ சிவக்குமார் ஆகியோர் சேரன் அலுவலகத்திற்கு வாய்ப்பு கேட்டு சென்றபோது அவர்களுடன் பேச்சுத்துணைக்காக சென்றவர்தான் அசோக் பாண்டியன்.. ஆனால் வாய்ப்பு கிடைத்தது என்னவோ சும்மா டைம்பாசுக்காக அவர்களுடன் சென்ற இவருக்குத்தான்.. அப்படித்தான் எதிர்பாராமல் தொடங்கியது இவரது சினிமா பயணம்..

அதன்பின் இந்த நான்கு வருடங்களில் கொடி, மாவீரன் கிட்டு, ரஜினி முருகன், பொறம்போக்கு, கத்தி, சிங்கம்-2, பூஜை, நான் தான் பாலா உள்ளிட்ட 52 படங்களில் நடித்திருக்கிறார் என்றால் நிச்சயம் அது சாதனை தான். தவிர தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்துவிட்டார். அதில் ஒன்று சமீபத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ரீ என்ட்ரி ஆக வெளியான ‘கைதி நம்பர் 150’. இதுதவிர 25க்கும் குறையாத விளம்பரப்படங்களிலும் நடித்துள்ளார் அசோக் பாண்டியன்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டாருடன் ‘2.O’, கடம்பன், காதல் காலம், காஞ்சாரன் ஆகிய படங்களில் நடித்துவருகிறார் அசோக் பாண்டியந. ஷங்கர் டைரக்சனில் ‘2.O’ படத்தில் நான்கு நாட்கள் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பொன்னான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது தான் ஹைலைட்.. முதல்நாள் காலையிலேயே ரஜினிக்கும் இவருக்கும் தான் முதல் ஷாட்டே. தலைவருடன் நடிக்கப்போகிறோம் என்கிற பதட்டம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் நடித்த அசோக் பாண்டியன் வசனத்தில் மட்டும் கொஞ்சம் ஸ்பீட் கூட்டிவிட்டாராம்.

அந்த ஷாட் முடிந்ததும் அருகில் வந்த ஷங்கர், “எல்லாம் ஒகே சார்.. டயலாக் ஸ்பீட் மட்டும் கொஞ்சம் குறைச்சுக்குங்க என சொல்ல, அருகில் இருந்த ரஜினி சிரித்துக்கொண்டே ‘நம்ம பக்கத்துல இருந்தாலே ஸ்பீட் வந்துருதுல்ல” என ஜாலியாக கூறி அசோக் பாண்டியனை உற்சாகப்படுத்தினாராம்… அடுத்த ஷாட்டில் காட்சி ஓகே ஆக, “ரெண்டாவது டேக்கிலேயே ஷங்கர் கிட்ட ஒகே வாங்குன ஆளு நீங்களாத்தான் இருக்கும்” என பாராட்டவும் செய்தாராம் ரஜினி.

தற்போது நடித்துள்ள ‘காதல் காலம்’ படத்தில், கதையின் திருப்பத்திற்கு காரணமான முக்கியமான கதாநாயகனின் தந்தை கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.. இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை நான்கு நாட்கள் படமாக்கினார்களாம்.. அந்த நான்கு நாட்களும் தயாரிப்பாளர் ஸ்பாட்டிலேயே இருந்து இவர் நாயகியின் அப்பாவாக நடித்த காட்சிகளை பார்த்து ரசித்தாராம்.

அசோக் பாண்டியனின் அடுத்த இலக்கு பிரதான வில்லன் வேடத்தில் நடித்து ஒரு கலக்கு கலக்குவது தானாம். அதற்கான வாய்ப்பும் சூழலும் விரைவிலேயே கிடைப்பதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன என்று கூறும் அசோக் பாண்டியனை அப்படிப்பட்ட சில கதைகளில் நடிக்க கேட்டுள்ளார்களாம்..

விரைவில் தன்னை முழுமையாக வெளிப்படுத்தும் கேரக்டரில் எதிர்பார்க்கலாம் என்கிறார் அசோக் பாண்டியன் நம்பிக்கையாக.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *