Search

டோக்கியோ தமிழ்ச்சங்கம் சார்பில் கிரேஸி மோகனுக்கு சிறப்பு நினைவேந்தல்!

ஜூன் 10 தமிழ் சினிமாவிற்கும் நாடக மேடை இரண்டுக்குமே ஒரு கருப்பு நாள். ஆம், கலைஞர் கிரேஸி மோகனை இழந்த நாள்.

1952ல் பிறந்த மோகன், இயந்திரவியல் படித்த போது ’Great Bank Robbery’ என்ற நகைச்சுவை நாடகத்தை நிகழ்த்தி பரிசு பெற்றார்.

அதன் பிறகு சொந்த நாடக குழுவினை தொடங்கி பல்லாயிரம் மேடைகளில் நாடகங்களை நடத்தி வந்தார்.

க்ரேஸி க்ரியேஷணின் ‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகம் மட்டுமே பல்லாயிரக்கணக்கான மேடைகளில் அரங்கேறியது.

நகைச்சுவை, உடனடி பதில் போன்றவற்றில் பாண்டித்தயம் பெற்றிருந்தவர். உலக நாயகனின் அபூர்வ சகோதரர்கள் தொடங்கி பஞ்ச தந்திரம், தெனாலி, பம்மல் கே சம்பந்தம் அவ்வை சண்முகி, வசூல்ராஜா, மைக்கேல் மதன காமராஜன் என பல படங்களுக்கு வசன கர்த்தாவாக இருந்தவர் கிரேஸி.

இந்நிலையில், அவரது நினைவுநாளில் டோக்கியோ தமிழ்ச்சங்கமும், க்ரேஸி க்ரியேஷனுடன் இணைந்து கிரேஸி மோகனுக்காக நேரலை சிறப்பு நினைவேந்தல் நிகழ்வை நாளைய தினம் கமல்ஹாசன் அவர்களின் முன்னிலையில் பெருமையுடன் வழங்கவிருக்கிறது.

இந்நிகழ்வில் உலகெங்கிலும் இருக்கக்கூடிய 25க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ளவிருக்கின்றன.

மேலும், நாசர், பிரபு, குஷ்பூ, கே எஸ் ரவிக்குமார், சந்தான பாரதி, கு ஞானசம்பந்தன், ஆகிய பிரபலங்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இந்நிகழ்வில் பொன்மாலை பொழுது நண்பர்கள் குழுமத்தின் படைப்பாக்கத்தில் டோக்கியோ தமிழ் சங்கத்தின் ஆதரவில் ’கிரேஸி மோகன் – சிறப்பு நினைவு பாடல்’ ஒன்றை கமல்ஹாசன் வெளியிடுகிறார்.